Dhanush speech: குபேரா இசை வெளியீட்டு விழா.. வடசென்னை 2 அப்டேட் கொடுத்த தனுஷ்.. மெகா லைன் அப்!
சென்னை: "நீங்களும் 2018ல இருந்து கேட்டுட்டு இருக்கீங்க" என விரைவில் வடசென்னை 2 படத்தில் நடிக்கப் போவதாக நடிகர் தனுஷ் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஜூன் மாதம் கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் மற்றும் தனுஷின் குபேரா வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

அதே சமயம் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட சண்டைகளும், தேவையற்ற வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். நெகட்டிவிட்டிகள் குறித்து பேசும் போது மேடையில், நடிகர் தனுஷ் சற்றே கண்கலங்கினார் என்றும் கூறுகின்றனர். ஆனால், தனது ரசிகர்கள் பலத்தால் அத்தனை தடைகளையும் கடந்து விடுவேன் என்கிற கர்ஜனையை அவர் செய்த நிலையில், அரங்கமே அதிர்ந்தது.
வெற்றிமாறனும் தனுஷும்: பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என எப்போதெல்லாம் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் காம்போ படங்கள் வெளியாகிறதோ அப்போதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு பெருமையும் கூடவே வந்து சேர்கிறது. வடசென்னை 2ம் பாகம் வராது என்றும் அதில், தனுஷ் நடிக்க வாய்ப்பில்லை என்றும் வெற்றிமாறன் இயக்காமல் அவரது உதவி இயக்குநர் யாராவது நடிகர் மணிகண்டனை வைத்து வெப்சீரிஸ் போல இயக்கப் போகிறார்கள் என ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்த நிலையில், அத்தனைக்கும் தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வடசென்னை: கடந்த 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அந்த படம் வெளியான சமையத்தில் வடசென்னை மக்கள் குறித்து தவறான சித்தரிப்பு உள்ளதாக சர்ச்சைகளும் வெடித்தன. அதற்காக வெற்றிமாறன் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர், வடசென்னை 2 படத்தை எடுக்காமல் தனுஷ் உடன் இணைந்து அசுரன் படத்தை இயக்கினார். விடுதலை 1 மற்றும் 2 படங்களை எடுத்த வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குபேரா இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட்டை தனுஷ் கொடுத்துள்ளார்.

வடசென்னை 2 எப்போ?: நடிகர் தனுஷ் மேடையேறி குபேரா படம் குறித்தும் அந்த படத்தை இயக்கிய சேகர் கம்முலா குறித்தும் உடன் நடித்த லெஜண்டரி நடிகர் நாகார்ஜுனா பற்றியும் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விழா நாயகன் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்தும் பேசிவிட்டு, தனது ரசிகர்கள் தன்னுடன் எத்தனை ஆண்டுகள் பயணிக்கின்றனர். தன்னை பற்றி வரும் 4 வதந்திகளால் தன்னை காலி செய்துவிட முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். கடைசியாக, ரசிகர்கள் அவரிடம் வடசென்னை 2 எப்போ வரும்? என்கிற கேள்வியை முன் வைக்க, "நீங்களும் 2018ல இருந்தே கேட்டுட்டுத்தான் இருக்கீங்க, அடுத்த வருஷம் (2026) வடசென்னை 2 பூஜை போட்டு தொடங்கிடுவோம்னு சொல்லி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.
மெகா லைன் அப்: குபேரா படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தைத் தொடர்ந்து போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதற்காகத்தான் போலீஸ் கட் எல்லாம் செய்து இப்படியொரு கெட்டப்பில் தனுஷ் இருக்கிறார் என்கின்றனர். மேலும், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் உடன் இணைந்து வடசென்னை 2, அண்ணன் செல்வராகவனின் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என பல படங்கள் தனுஷின் லைன் அப்பில் உள்ளன.


Click it and Unblock the Notifications











