Nayanthara: வெட்கமா இல்லையா? நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரியில் தனுஷ் குறித்து சர்ச்சை காட்சி!
சென்னை: நடிகை நயன்தாரா இன்று தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் நேற்றிலிருந்தே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் இன்று வெளியாகும் எனவும் படக்குழுக்கள் தெரிவித்துள்ளன. நயன்தாராவுக்கு இந்தப் பிறந்த நாள் மிகவும் முக்கியமான பிறந்த நாள்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு காரணம் நயன் விக்கி தம்பதியரின் திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த டாக்குமெண்ட்ரி தொடர்பாக இவருக்கும் தனுஷ்க்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், டாக்குமெண்ட்ரியில் தனுஷ் குறித்து ஒரு சர்ச்சைக் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
நயன் மற்றும் விக்கி நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றும்போது காதல்வயப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளாக காதலித்து, அதன் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் வரை பல நட்சத்திரப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுமட்டும் இல்லாமல் தனது திருமணத்தை வைத்து ஒரு டாக்குமெண்ட்ரியை உருவாக்கி அதனை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடவும் நயன் முடிவு செய்திருந்தார்.

இங்குதான் பிரச்னையே தொடங்குகின்றது. அதாவது நயன் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர்கள், நயனின் காட்சிகளை கேட்டதும் கொடுத்துவிட்டார்கள். ஆனால் நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்ஷிடம் இவர்கள் கேட்டதும் அவர் கொடுக்க மறுத்துவிட்டார் எனவும் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் நயன் விக்கி தம்பதியர் தனுஷிடம் முறையாக கேட்கவில்லை என்றும், அவர்களது திருமணத்திற்கு தனுஷுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நயன் விக்கி திருமண டாக்குமெண்ட்ரியில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளோ அல்லது படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என தனுஷ் தரப்பில் மிகவும் உறுதியாக சொல்லப்பட்டது.

கடிதம்: இதனால் நயனின் திருமண டாக்குமெண்ட்ரி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதி டாக்குமெண்ட்ரி ரிலீஸ் ஆகும் என நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் கூறப்பட்டதால், பலரும் தனுஷ் - நயனுக்கு இடையிலான பிரச்னை முடிந்தது என நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 16ஆம் தேதி நயன்தாரா, நடிகர் தனுஷ்க்கு எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக தனுஷ் மிகவும் மோசமானவர் என்றும், மேடைகளில் அவர் பேசுவதற்கும் அவரது குணாதிசியங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரூ. 10 கோடி: நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள், படத்தின் பாடல் வரிகள், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்த தனுஷ் அனுமதியே அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது தனுஷ் மற்றும் நயன் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் பெரும் சண்டையை ஏற்படுத்தியது. நானும் ரவுடிதான் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்த தனுஷ் ரூபாய் 10 கோடிகள் நஷ்டஈடு கேட்டதாகவும் நயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.

தனுஷ் சர்ச்சைக் காட்சி: இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டாக்குமெண்ட்ரியில் நடிகை ராதிகாவும் பேசியுள்ளார். ராதிகா நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா கதாபத்திரத்தில் நடித்துள்ளார். டாக்குமெண்ட்ரியில் ராதிகா பேசுகையில், "நயன் - விக்கி இருவரும் காதலித்தது தொடர்பாக முதலில் என்னிடம் போன் செய்து கூறியது தனுஷ்தான். இதனை நான் நம்பவில்லை. மேலும் அதுபோல் எல்லாம் எதுவும் இருக்கும்படி எனக்குத் தெரியவில்லை எனக் கூறியதும். உடனே தனுஷ், ' அக்கா உங்களுக்கு வெட்கமா இல்லையா?' இத்தனை வருசமா நடிக்கறேனு சொல்றீங்க" எனவும் தனுஷ் கூறியதாகவும், அப்போதுதான் எனக்கு இந்த விஷயமே தெரியவந்தது எனவும் ராதிகா பேசியுள்ளார். ராதிகாவின் இந்தப் பேச்சு ஏற்கனவே பெரும் சர்ச்சையாக உள்ள நயன் - தனுஷ் விவகாரத்தினை மேலும் பரபரப்பாக மாற்றும் வகையில் உள்ளது என பலர் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.


Click it and Unblock the Notifications











