உலகநாயகனைப் போல் ஒரு கம்ப்ளீட் சினிமாக்காரன் தனுஷ்.. ஹீரோவும் வில்லனும் தனுஷ்தான்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடிப்பைக் கடந்தும் சினிமாவில் இருக்கும் மற்ற துறைகளில் கால் பதிக்க ஆசைப்படுவது மட்டும் இல்லாமல் அதில் கோலோச்சும் அளவிற்கு உழைப்பைச் செலுத்துகின்றனர். அப்படி இன்றைக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவே முன்னுதாரணமாக பார்க்கும் கலைஞன் என்றால் அது கமல்ஹாசனை மட்டும்தான். இப்படியான ஒரு கலைஞனைக் கொண்டிருப்பதற்கு தமிழ் சினிமா என்றைக்கும் பெருமைப்படும்.
கமல்ஹாசனைப் போல் அனுபவம் பெறவில்லை என்றாலும் சினிமாவின் அனைத்து துறைகளிலும் கால் பதித்து அதில் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பல நடிகர்கள் கலைஞர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட தனுஷ். இவர் நாளை அதாவது ஜூலை 28ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், தனது 25 படத்தினை எட்டுவதற்கு முன்னரே பாடலாசிரியராகவும் பாடகராகவும் தன்னை நிரூபித்தார். தனது 25வது படத்தினை தானே தயாரிக்கவும் செய்தார்.

தனுஷ் என்ற நடிப்புத் தாகம் கொண்ட நடிகனை திருப்தி செய்ய அவ்வப்போது நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகின்றார். அதேநேரத்தில் ரசிகர்களை திருப்தி செய்ய கமர்ஷியல் படங்களிலும் நடித்து வருகின்றார். ஒரு படத்தின் கதையில் கமர்ஷியல் எலிமெண்ட்டும் ஆர்ட் எலிமெண்ட்டும் ஒரே படத்தில் இருக்கின்றது என்றால் பெரும்பாலான நடிகர்களின் முதல் தேர்வு நடிகர் தனுஷாகத்தான் இருக்கின்றார் எனக் கூறும் அளவிற்கு தனுஷின் 50 படங்களும் அமைந்துள்ளது.
இயக்குநர்: பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி தன்னுள் இருந்த இயக்குநரை வெளிக்கொண்டு வந்த தனுஷ் இன்றைக்கு தனது 50வது படமான ராயன் படத்தையும் இயக்கி பாராட்டுகளைக் குவித்து வருகின்றார். தனுஷ் ஒரு பாடலை எழுதுகின்றார் என்றால், அதில் ரசிகர்களை கிறங்கச் செய்யும் அளவிற்கு வல்லமை படத்தை எழுத்துக்களை வெளிக்கொண்டு வந்துவிடுவார். வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா பாடலை எழுதி பாடியிருப்பார். இந்த பாடலைக் கேட்டு அழுகாத அல்லது உருகாத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் எனலாம்.
திறமை: சினிமா உலகில் தனுஷ் மூலம் தனக்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் பலர். குறிப்பாக சிவகார்த்திகேயன், அனிருத் போன்ற திறமையானவர்களை அவர்களின் இளமைப் பருவத்திலேயே கணித்து, தன் கைபிடித்து சினிமாவுக்கு கொண்டு வந்து விட்டு அவர்கள் வெற்றியை தன் வெற்றிபோல் கொண்டாடியவர் தனுஷ்.

கூட்டணி வெற்றிகள்: பொல்லாதவனில் இணைந்த தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அதன் பின்னர், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களாகவே கொடுத்து இவர்கள் கூட்டணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திவிட்டனர். இவர்கள் கூட்டணியில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்துக்காக காத்துக் கொண்டு உள்ளனர் ரசிகர்கள். அதேபோல் துள்ளுவதோ இளமை சினிமாவில் அறிமுகமான தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி அதன் பின்னர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களின் மூலம் வெறித்தனமான ரசிகர்களை உருவாக்கியுள்ளனர். இன்றைக்கும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். தனுஷின் யாரடி நீ மோகினி படத்தின் கதையை எழுதியது கூட செல்வராகவன்தான். அதேபோல் நானே வருவேன் படத்தில் வில்லனாகவும் கதாநாயகானவும் நடிப்பில் அசத்தியிருப்பார்.
விருதுகள்: ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றது மட்டும் இல்லாமல், இந்த பாடலுக்காக பல விருதுகளை வாங்கினார். ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றார். இதுவரை 5 ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். தமிழ் சினிமாவைக் கடந்து தற்போது தெலுங்கு சினிமாவிலும் தனுஷ் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அதேநேரத்தில் பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் கால் பதித்து பாராட்டுகளைக் குவித்த பின்னரும்கூட இன்றைக்கும் தலைக்கணம் இல்லாத நடிகராக ஒரு கம்ப்ளீட் சினிமா கலைஞனாக வலம் வருகின்றார். நாளை தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கைத் தீர்மானிக்கும் கலைஞனாக உயர ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள் தனுஷ்.


Click it and Unblock the Notifications











