Kuberaa Box Office: பாக்ஸ் ஆபிஸின் அதிபதியாக மாறி நிற்கும் குபேரா.. தனுஷ் கழுத்தில் விழுந்த வெற்றி மாலை!
சென்னை: நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குபேரா. தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியானது. படம் வெளியாகி, இன்றுடன் அதாவது ஜூன் 26 ஆம் தேதியுடன் ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் குபேராவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பது குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
குபேரா படத்தை பொறுத்தவரையில் பிச்சைகாரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும், பணக்காரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ், பிச்சைக்காரராக நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் படத்தில் வலது கை விரல்கள் பாதிக்கப்பட்டவராகவும், அறிவாளியான அப்பாவி கதாபாத்திரத்திலும் தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்களில் இருக்கும் பாடல்கள், சண்டைகள் உள்ளிட்டவை இருந்தும் இல்லாதது போல இருப்பதே இந்த படத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட முக்கிய காரணம்.
படத்தின் புரோமோசனில் தொடங்கி, படம் வெளியாகி வெற்றி விழா கொண்டாடப்பட்ட போதும் சரி, பலரும் பாராட்டியது தனுஷின் நடிப்பைத்தான். வெற்றி விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லி இருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். ஆனால் தனுஷ், இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்திற்காக தனுஷ்க்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்" எனக் கூறினார்.

தனுஷ்க்கு தேசிய விருது: அதேபோல் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியபோது, " புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும் எனக் கூறினேன். அதேபோல் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் குபேரா படத்திற்காகவும் தனுஷ்க்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று கூறுகிறேன் எனக் கூறி தனுஷை பாராட்டினார். தேவி ஸ்ரீ பிரசாத் மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்திற்கு மிகவும் கச்சிதமாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.
படத்தின் பிரச்னை: படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது படத்தின் நீளம். தேவையற்ற காட்சிகள் மட்டும் சுமார் அரை மணி நேரத்திற்கு இருந்தது எனக் கூறலாம். மேலும் பல காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருந்தது. உதாரணத்திற்கு ஒரு லாரி நிறைய பணம் சாலையில் கொட்டிக் கிடக்கிறது. அந்த பணத்தை பார்க்க சுமார் 30 பேர் இருக்கிறார்கள், காவல் துறையினர் சுமார் 7,8 பேர் இருக்கிறார்கள். முதல் பாதியை பிரமாதப்படுத்திய இயக்குநர், இரண்டாவது பாதியில் ஆங்காங்கே பல ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டார். இசை, நடிப்பு, முதல் பாதி வரையிலான திரைக்கதை என பல விஷயங்கள் பாராட்டப்பட்டாலும் இரண்டாம் பாதி படம் சொதப்பல் தான்.
வசூல்: தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் மொத்தமாக ரூபாய் 100 கோடிகள் வசூல் செய்திருந்த நிலையில், குபேரா படம் முதல் 6 நாட்களிலேயே ரூபாய் 100 கோடிகள் வசூல் செய்துள்ளதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே ஓடிடி பிசினஸில் படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டதால் படக்குழு இப்போதே லாபத்தை ஈட்டி வருகிறது என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











