Kuberaa Box Office: வசூலை அள்ளும் குபேரா.. தனுஷ்க்கு குரு உச்சத்துல இருக்காரு போல.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆன குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்திற்கு தனுஷ் ரசிகர்களை கடந்து பொதுமக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே உள்ளார்.
குபேரா தனுஷின் 51 வது படம். தனது 50 வது படமான ராயன் படத்தை இவரே எழுதி இயக்கி இருந்தார். ராயன் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறியது. படத்தின் திரைக்கதை புத்தகம் ஆஸ்கார் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராயன் படத்திற்குப் பின்னர் இந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் குபேரா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இவர் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு தெலுங்கு திரையுலகில் ஏற்பட்டது. அதேபோல் படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பல ஸ்டார்களும் நடித்திருப்பதால் படத்தின் மீது தனி கவனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

படத்தில் தனுஷ் பிச்சை எடுத்து வாழ்பவர் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். தனுஷ்க்கு ஒரு இடத்தில் கூட மாஸ் காட்சிகள் வைக்கப்படவில்லை. படத்தை கூடுமானவரை உண்மைக்கு நெருக்கமாக காட்ட முயற்சித்து உள்ளார்கள் என்பது திரையில் தெரிகிறது. பாராட்டுகளைப் பெற்றாலும் படம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடுவது என்பதே மைனஸான விஷயம் தான். திரைக்கதையிலும் ஆங்காங்கே சில ஓட்டைகள் உள்ளதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
திரைக்கதை ஓட்டை: தனுஷின் நடிப்பு பாராட்டப்படுகிறது, மற்ற நடிகர்களின் நடிப்பும் பாராட்டப்படுகிறது, இதுமட்டுமில்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் இசை கௌரவிக்கப்படுகிறது, படம் டெக்னிக்கலாகவும் சிறப்பாக இருப்பதாக பாராட்டப்படும் இந்த படத்தில் நேரமும் ஜவ்வு போல இழுக்கப்பட்ட திரைக்கதையும் லாஜிக்கே இல்லாத சில காட்சிகளையும் ரசிகர்களும் விமர்சகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.

வசூல் விபரம்: இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 14. 75 கோடிகளும் இரண்டாவது நாளில் ரூபாய் 16.5 கோடிகளும் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் படத்தின் முதல் மூன்று நாள் வசூலுமே படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக் நிக் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி மூன்றாவது நாளில் படம் ரூபாய் 17.25 கோடிகள் வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில் படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடிகளை வசூல் செய்துள்ளது. குபேரா படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் ஹப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாறியுள்ளது.
படக்குழு மகிழ்ச்சி: ரிலீஸ் நாள், அதைத்தொடர்ந்து வார இறுதி நாட்கள் என முதல் மூன்று நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. படக்குழு இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனாலும் வெளிநாட்டு வசூல் உள்நாட்டு வசூல் என படக்குழுவுக்கு திருப்தி அளிக்கும் வசூலை படம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











