மாமா வராரு முன்னே மருமகன் வராரு பின்னே.. பட்டாஸ் ரிலீஸ் தேதி சொன்ன தர்பார் அப்டேட்!
சென்னை: பொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்ஸ்டாரின் தர்பார் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது என்பது மீண்டும் இந்த அறிவிப்பால் மறைமுகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடி படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்திலும் தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ளாரா என்ற கேள்வியை மோஷன் போஸ்டர் எழுப்பியுள்ளது.
டபுள் ரோலா?
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என சிவகார்த்திகேயனின் படங்களை இயக்கி வந்த துரை செந்தில்குமார், கொடி படத்தில் தனுஷை டபுள் ஆக்ஷனில் நடிக்க வைத்திருந்தார். ஏற்கனவே வெளியாகியிருந்த பட்டாஸ் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சில் ப்ரோ பாடல்களில் சின்ன பையனாக தனுஷின் லுக் இருக்கிற நிலையில், தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் தாடி மீசை வைத்துக் கொண்டு தற்காப்பு கலைஞராக தனுஷ் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், தனுஷ் இந்த படத்திலும் டபுள் ரோலா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சில் ப்ரோ
பப்ஜி லவ்வர்களுக்காக உருவாக்கப்பட்ட பாடல் போல வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் சில் ப்ரோ பாடல் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் ரேஸ்
பட்டாஸ் படம் பொங்கல் ரேசில் கலந்து கொள்ளாது என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, பொங்கலுக்கு நாங்களும் வருகிறோம் என சத்ய ஜோதி களத்தில் இறங்கியுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை கிட்டத்தட்ட ஒருவாரம் இருக்கின்ற நிலையில், ஜனவரி 16ம் தேதி பொங்கல் தின கொண்டாட்டமாக பட்டாஸ் படம் வெளியாகிறது.
பட்டாஸ் பொங்கல்
இந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் பட்டாஸ் திரைப்படம், பொங்கலுக்கு பட்டாஸ் வெடிக்க காத்திருக்கிறது. பட்டாஸ் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து தனுஷ் ரசிகர்கள் பட்டாஸ் பொங்கல் என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தர்பார் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
தனுஷின் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் நாள் வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரஜினியின் தர்பார் படம், லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது போல ஜனவரி 9ம் தேதியே வெளியாவது மறைமுகமாக உறுதியாகியுள்ளது. விரைவில் தர்பார் ரிலீஸ் தேதியை டீஸருடன் லைகா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











