சீன மொழியில் ரீமேக் ஆகிறதா தனுஷின் அந்த சூப்பர் ஹிட் படம்? லாக்டவுனுக்கு பிறகு அறிவிப்பு வருமாமே!
சென்னை: தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படம் சீனாவில் ரீமேக் செய்ய போவதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம், அசுரன். தனுஷ் வயதான கேரக்டரிலும் இளம் வயது தோற்றத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.
அவர் மனைவியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இது அவருக்கு தமிழில் முதல் படம்.

மிகப்பெரிய வெற்றி
டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், வெங்கடேஷ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. அண்ணனை கொன்றவனை தம்பி பழிதீர்க்கிறான். அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்கள்தான் கதை. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

தெலுங்கு கன்னடம்
நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இதுதான். இந்தப் படம், ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஹிட்டான தமிழ் படமும் இதுதான். 100 நாட்களை கடந்து ஓடிய இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

பிரியாமணி
தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில், நடிகை பிரியாமணி நடிக்கிறார். தயாரிப்பாளர் தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. கன்னடத்தில் பிரபல ஹீரோ சிவராஜ்குமார் நடிப்பில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
இந்நிலையில் இந்த படம் சீன மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது. சீனாவில் இந்திய படமான த்ரிஷ்யம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிமேக் செய்யப்பட்டது. இதையடுத்து அசுரன் படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதற்காக பிரபல சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று, அசுரன் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

அறிவிப்பு வரும்
லாக்டவுன் முடிந்ததும் இதற்கான முறையான அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. அப்படி சீன மொழியில் அசுரன் ரீமேக் செய்யப்பட்டால், அந்த மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். ரஜினிகாந்தின் 2.0, பாகுபலி ஆகிய படங்கள் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியாயின. இந்தப் படம் ரீமேக் ஆகிறது.


Click it and Unblock the Notifications











