அண்ணன் செல்வராகவனுக்கு சாணிக் காயிதம்.. தம்பி தனுஷுக்கு கேப்டன் மில்லர்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: ரத்தம் தெறிக்க தெறிக்க ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதியை சத்ய ஜோதி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
தரமணி படத்தின் நாயகன் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ராக்கி திரைப்படம் தமிழ் சினிமாவில் இப்படியொரு கொடூர கேங்ஸ்டர் படமா என பலரையும் வாய் பிளக்க வைத்தது.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான சாணிக் காயிதம் படத்தை பார்த்தவர்கள் பொன்னி மற்றும் சங்கையனின் சம்பவங்களை பார்த்து மிரண்டே போனார்கள்.

க்ரூயல் இயக்குநர்
ஹாலிவுட் படங்களில் பார்க்கக்கூடிய கொடூரமான ரத்தக் களறியான காட்சிகளை எந்தவொரு சமரசமும் செய்துக் கொள்ளாமல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து கொண்டு தனக்கான தனி முத்திரையை பதித்து விட்டார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவர் இயக்கிய ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்கள் அத்தனை ரணங்களையும் ரத்தங்களையும் திரையில் பீய்ச்சி அடித்து இருக்கும்.

அண்ணனுக்கு சாணிக் காயிதம்
இயக்குநராக பல படங்களை இயக்கி வந்த செல்வராகவனை முதல் முதலாக நடிகராக மாற்றியதே அருண் மாதேஸ்வரன் தான். ஆனால், அதற்கு முன்பாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் அறிமுகமாகி விட்டார். ஆனால், சாணிக் காயிதம் படத்தில் சங்கையனாக நடித்ததற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதே கொடுக்க வேண்டும் என பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தம்பி தனுஷுக்கு
அண்ணன் செல்வராகவனை தொடர்ந்து தம்பி தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்க உள்ளார் அருண் மாதேஸ்வரன். ஆனால், இது தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு போராட்ட வீரனின் கதை என இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில், அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி
சத்ய ஜோதி தயாரிப்பில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் 2023ம் ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை ஷேர் செய்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், இந்த படத்துக்கு அசுரன் படத்தைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள்
பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் மற்றும் அட்ரங்கி ரே படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தற்போது இதே அறிவிப்பை வெளியிட்டு நடிகர் தனுஷை வாழ்த்தி உள்ளனர். முகத்தில் மாஸ்க் அணிந்த ஸோரோவாக குதிரைக்கு பதில் புல்லட்டில் சீறி பாய்கிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











