தனுஷின் கர படத்துக்கு பிரச்னை.. நீதிமன்றத்தில் வழக்கு.. ரிலீஸாகுமா படம்?
சென்னை: தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கர. ஏப்ரல் 30ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் கோலாகலமாக நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில்; படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனால் படம் ரிலீஸாகுமா ஆகாதா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் திரைப்படம் கர. இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் வெளியான தனுஷின் தேரே இஷ்க் மெய்ன், குபேரா, இட்லி கடை ஆகிய படங்களில் இட்லி கடை மட்டும்தான் வெற்றி பெற்றது. அதுவும் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.

பெரிய எதிர்பார்ப்பு: மூன்று படங்களுமே தனுஷுக்கு சிறப்பான நினைவுகளை கொடுக்காததால் இந்தப் படத்தின் மீது அவரும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே விக்னேஷ் இயக்கிய போர்த்தொழில் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஹிட் என்பதை தாண்டி அந்தப் படத்தை அவர் உருவாக்கியிருந்த விதம் அனைவரையுமே கவர்ந்தது. பத்து படங்கள் இயக்கிய இயக்குநரின் பக்குவத்தை தன்னுடைய முதல் படத்திலேயே காண்பித்திருந்தார். எனவே இதிலும் அதே ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: கர படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்ததிலிருந்தே அனைவரிடமும் ஆவலை அதிகரித்திருந்தது. சமீபத்தில்தான் படத்துடைய ட்ரெய்லர் வெளியானது. அதுவும் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ் திருடனாகவும் நடித்திருக்கிறார். முதன்முறையாக அவர் திருடனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ட்ரெய்லரில் மமிதாவின் நடிப்பும் பட்டையை கிளப்பும்படியாகவே அமைந்திருந்தது. எனவே இது தனுஷுக்கும், மமிதாவுக்கும் ஃபெர்ஃபார்மன்ஸ் ரீதியாகவும் நல்ல பெயரை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
கோலாகலமாக நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் பயங்கரமாக சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. நேற்றுகூட சென்னையில் கோலாகலமாக கர ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. அதில் கலந்துகொண்ட தனுஷ் ஏகப்பட்ட விஷயங்களை பேசினார். அதிலும் இயக்குநர் விக்னேஷ் ராஜா குறித்தும், அவரது மனைவி குறித்தும் தனுஷ் பேசியதை கேட்டு விக்னேஷின் மனைவி கண்களும் கலங்கிவிட்டார். இப்படி பல எமோஷன்களோடு நேற்றைய ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் முடிந்தது.
படத்துக்கு வந்திருக்கும் சிக்கல்: இந்நிலையில் கர திரைப்படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது கரா Kara என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துவிட்டோம். எனவே கர படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என வேங்கை அய்யனார் என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். நாளை இந்த மனு விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு தொடரப்பட்டிருப்பதால் கர திரைப்படம் ரிலீஸாவதில் சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சமும் தனுஷ் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications