வாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ள கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கி உள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன்.
உரிமைக்காக குரல் கொடுக்கும் அடித்தட்டு மனிதனின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் விதமாக கர்ணன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறான் கர்ணன்
தனுஷ், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், லால் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது. அசுரன் படத்திற்கு பிறகு கர்ணன் படத்தை நடிகர் தனுஷும் தமிழ் சினிமா ரசிகர்களும் வெகுவாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு தேசிய விருது
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படத்திற்காக இன்னொரு முறை நடிகர் தனுஷ் தேசிய விருது வெல்வார் என்று இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். சமீபத்தில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கர்ணனின் யுத்தம்
மாஞ்சோலை எஸ்டேட் சம்பவம் என்றும், மேலவளவு பட்டியலினத்தவர் படுகொலை சம்பவம் என்றும் தனுஷின் கர்ணன் படத்தின் கதை குறித்து ஏகப்பட்ட கணிப்புகள் வைரலாகி வருகின்றன. வாளேந்தி குதிரை மீது ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக போராடும் கர்ணனின் யுத்தம் நிறைந்த படத்திற்கு தற்போது தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.

என்ன சான்றிதழ்
அதிக வன்முறைகள் நிறைந்து கர்ணன் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. பரியேறும் பெருமாள் படத்தில் டீ கிளாஸில் சாதிய பிரச்சனையை சொன்ன மாரி செல்வராஜ், கர்ணன் படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்பதை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மோகன் லால் கையில்
தனுஷின் கர்ணன் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. கேரளா முழுவதும் கர்ணன் படத்தை வெளியிடும் உரிமையை நடிகர் மோகன் லால் பெற்றுள்ளார். கர்ணன் படம் வெற்றியடையவும் நடிகர் தனுஷுக்கு வாழ்த்து சொல்லி மோகன் லால் பதிவிட்ட ட்வீட்டும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











