Vaathi Day 3 Box Office Collection: முதல் வாரத்தில் தனுஷ் ஆல் பாஸ் ஆனாரா இல்லையா?
சென்னை: தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் கடந்த வாரம் 17ம் தேதி வெளியானது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் வெளியாகியுள்ளது.
தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள வாத்தி படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வாத்தியாரான தனுஷ்
தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் கடந்த வாரம் 17ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள வாத்தி படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனாலும் தனுஷ் நடிப்பைத் தவிர, மேக்கிங், திரைக்கதை என பலவகையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கல்வியில் தனியார்மயம் கூடாது என்ற கருத்தியலோடு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி
தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் ரிலீஸானது. இதில் தனுஷின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசையும் மட்டும் தான் திருப்தியாக உள்ளதாக ரசிகர்கள் கூறினார். மேக்கிங், திரைக்கதை எல்லாமே தெலுங்குப் படம் பார்ப்பது போல உள்ளதாகவும் அவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அதேநேரம் அசுரன் படத்துக்குப் பிறகு கென் கருணாஸுக்கு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது வாத்தி.

வாத்தி பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், வாத்தி திரைப்படம் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் 12 முதல் 14 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நாளில் 11 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், முதல் வார இறுதியான நேற்று 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முதல் வாரத்தில் 35 கோடி
அதன்படி தனுஷின் வாத்தி திரைப்படம் முதல் வாரத்தில் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் படத்துக்கு இது குறைவான பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங் என்றே சொல்லப்படுகிறது. முன்னதாக தனுஷும் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதும் சர்ச்சையாகியிருந்தது. பள்ளிக்கூடம் படிக்கும் போது நடந்த சில சம்பவங்களை வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருந்தார். அதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.

வாய் கொடுத்து மாட்டிய இயக்குநர்
அதேபோல், இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார். தான் அமைச்சரானால் சாதி ரீதியாக இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பேன் எனக் கூறினார். இதனால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக வறுத்தெடுத்தனர். இதுபோன்ற சர்ச்சையான கருத்துகள் வாத்தி படத்துக்கு பப்ளிசிட்டியாக அமைந்தாலும், வசூலில் கை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. முதல் வாரத்தில் 35 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ள வாத்தி, அடுத்து வரும் நாட்களில் கலெக்ஷன் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











