இது தனுஷ் ரசிகர்களுக்காக.. 2020 சம்மரில் ‘பட்டாஸ்’ வெடிக்கும் தனுஷ்!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ படம் நவம்பர் மாதம் இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: இந்த தீபாவளிக்கு தனுஷின் 'பட்டாஸ்' வெளியாகும் என எதிர்பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கு, படத்தின் அப்டேட் கூட கிடைக்கவில்லை.
ஆனால், அசுரன் படத்தின் அபார வெற்றியால், தனுஷின் 'பட்டாஸ்' குறித்து ரசிகர்கள் பெரிதாக கவலைப்படவில்லை.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் தனுஷின் 'பட்டாஸ்' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறனின் சிஷ்யன்
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் துரை செந்தில்குமார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த துரை செந்தில்குமாரின் திறமையை பார்த்த தனுஷ், துரை செந்தில்குமாரை இயக்குநர் ஆக்கினார்.
எதிர்நீச்சல் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதே காம்போவில் வெளியான காக்கிச்சட்டை எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்ததாக தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், தற்போது மீண்டும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் படத்தை இயக்கி வருகிறார்.

’டி40’
அசுரன் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘டி40' படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது லண்டனில் தனுஷின் ‘டி40' படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாகியுள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் ‘டி40' அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாஸ்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுஷின் கால்ஷீட் பிசியால் வரும் நவம்பர் 5ம் தேதிக்கு மேல் பட்டாஸ் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொடி படத்தை போலவே பட்டாஸ் படத்திலும் தனுஷ், அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார். அப்பா தனுஷுக்கு ஸ்நேகா ஜோடியாகவும் மகன் தனுஷுக்கு மெஹ்ரின் பிர்ஸடா ஜோடியாகவும் நடித்து வருகின்றனர். 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தனுஷின் பட்டாஸ் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடி பறக்குமா
தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் வெளியான கொடி படம், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கொடி 2 படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மாரி 2 போல கொடி 2 படமும் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டாஸ் என்ற தலைப்பில் துரை செந்தில்குமார் தனுஷை இயக்கி வருகிறார். இதன்மூலம் கொடி 2 படத்திற்கான சாத்தியம் தற்போது இல்லை என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











