100 கோடி கிளப்பில் இணைந்த வாத்தி.. தாறுமாறு ஹிட் அடித்த தனுஷ் படம்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது வாத்தி திரைப்படம்.
15 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் 100 கோடி வசூலை வாத்தி திரைப்படம் குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வார இறுதி நாட்களுடன் தான் 100 கோடி வசூலை வாத்தி கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மதிய பாக்ஸ் ஆபிஸ் கணக்குடனே கடந்துள்ளதாக கூறுகின்றனர்.

வசூல் வாத்தியார்
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், இந்த ஆண்டு வாத்தி திரைப்படம் அந்த சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

திருச்சிற்றம்பலத்தை தொடர்ந்து
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாறன், அட்ரங்கி ரே, நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதி ராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், அந்த படத்தின் வசூலை வாத்தி கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே சார் திரைப்படம் சாதித்துள்ளது.

100 கோடி வசூல்
கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் நேற்று வரை உலகளவில் 95 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வீக்கெண்டான சனிக்கிழமை காலை முதலே படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று மதியம் ஷோவுடன் வாத்தி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் தனுஷ் ரசிகர்கள் ஹாஷ்டேக் டிரெண்டிங் செய்து தெறிக்கவிடப் போகின்றனர்.

சந்தோஷத்தில் தனுஷ்
தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் சொதப்பிய நிலையில், விஜய்யின் வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும் 300 கோடி வசூல் சாதனையை படைத்தது. வாத்தி படத்துக்கும் தெலுங்கில் இருந்த வரவேற்பு தமிழில் இல்லாத நிலையில், படம் 100 கோடியை நெருங்குமா என பதட்டத்தில் இருந்த தனுஷ் தற்போது நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்ந்திருப்பார்.

வீடு கட்டின யோகம்
150 கோடி ரூபாயில் சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறிய நிலையில், அதன் மூலம் வந்த யோகம் தான் இந்த வாத்தி திரைப்பட வெற்றி என கோடம்பாக்கம் முதல் போயஸ் கார்டன் வரை ஒரே பேச்சாக எழுந்துள்ளது. வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் எனக் கூறுகின்றனர்.

1500 சண்டைக் கலைஞர்கள்
கேப்டன் மில்லர் படத்திற்காக சமீபத்தில் 1500 சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட போர்க் காட்சி ஒன்றை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











