இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதுதான் கடந்த சில நாட்களாக திரையுலகில் பேச்சாக இருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா நடைபெற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.
அன்னக்கிளி படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். முக்கியமாக அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வரப்பில் இருந்தவரும் இசைக்காக வாயை திறந்தார். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் முதல் படத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் கிராமத்து வாசனை அடிக்கக்கூடிய இசையை எந்த சமரசமுமின்றி மக்களுக்கு கொடுத்தார் இளையராஜா.

இசைஞானி: அன்னக்கிளி படத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வந்து அவர் புதிய பாய்ச்சலை செலுத்த எவர்க்ரீன் கூட்டணியான பாரதிராஜா - இளையராஜா கூட்டணி உருவானது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவையும், இசையையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றனர். பாரதிராஜா மட்டுமின்றி மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என அப்போதைய பீக் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு கலைஞர் கருணாநிதி இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார்.
பயோபிக்: இளையராஜா இப்போது இருக்கும் உயரம் எளிதில் வந்ததில்லை. பல அவமானங்கள், புறக்கணிப்புகளை கடந்துதான் அவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக இளையராஜாவின் வெற்றி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரது வாழ்க்கையை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களுக்கு சந்தோஷம் தரும் செய்தியாக அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இளையராஜா: அதன்படி மெர்குரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். முதலில் பால்கி இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட சூழலில், கேப்டன் மில்லர் படத்தில் ஏற்பட்ட புரிதல் காரணமாக தனுஷின் சிபாரிசின் பேரில் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தின் இயக்குநராக கமிட் செய்யப்பட்டார். படத்துக்கு இளையராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் சினிமாவாக இது இருக்கும் என்பதி ஐயமில்லை.
தொடக்க விழா: படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இளையராஜா, தனுஷ், அருண் மாதேஸ்வரன், கமல் ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன், கங்கை அமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இளையராஜா பற்றியும்; எடுக்கவிருக்கும் படம் பற்றியும் நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் பேசினார்கள். கமல் ஹாசன் படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாகங்கள்: இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். மேலும் வைரமுத்து கேரக்டரில் விஷாலும், ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டரில் சிம்புவும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது இந்நிலையில் இந்தப் படத்துக்காக தனுஷ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்து பேச்சு ஒன்று கேட்கிறது. தனுஷ் இந்தப் படத்தின் ஒவ்வொரு பாகத்துக்காகவும் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ இளையராஜா பயோபிக்கிற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா என ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











