இளையராஜா பயோபிக்கில் தனுஷ்.. இயக்குநர் யார் தெரியுமா?.. பிரம்மாண்ட படம் ரெடியாகுதாம்!
சென்னை: இசைஞானி என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் இளையராஜாவின் பயோபிக் படம் உருவாகப் போவதாகவும் நடிகர் தனுஷ் அதில் இளையராஜாவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் இயக்குநர் பால்கி இளையராஜா பயோபிக் படத்தை இயக்க வெகு நாட்களாகவே ஆர்வம் காட்டி வரும் நிலையில், விரைவில் தனுஷை வைத்து அந்த படத்தை எடுக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இளையராஜா: இசைக் கடவுளாகவே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் 70களில் இருந்து இப்போது வரை இளையராஜாவை கொண்டாடி வருகின்றனர். 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா எண்ணற்ற பாடல்களையும் பாடியுள்ளார். அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைப்பாளராக திரைத்துறையை கலக்கி வருகிறார்.
இளையராஜாவின் வாழ்வில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் புதைந்து கிடக்கும் நிலையில், அதனை படமாக இயக்கி அந்த வாழும் லெஜண்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற முயற்சியில் பாலிவுட் இயக்குநர் பால்கி தீவிரம் காட்டி வருகிறார்.
பால்கி இயக்கத்தில்: தனுஷ், அமிதாப் பச்சன் நடித்த ஷமிதாப் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் தான் பாலிவுட் இயக்குநர் பால்கி. அமிதாப் பச்சனின் சீனி கம், பா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான பால்கி தான் இளையராஜாவின் பயோபிக்கை இயக்கும் ஐடியாவை விரைவில் அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
தனுஷ் தான் சரியான தேர்வு: இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் தான் இளையராஜா பயோபிக்கில் நடிக்க சரியான ஆள் என்றும் இளம் வயது இளையராஜா தோற்றம் முதல் இப்போது இருக்கும் இளையராஜாவின் தோற்றம் வரை நடிகர் தனுஷ் கச்சிதமாக பொருந்துவார் என்றும் கூடிய விரைவிலேயே இந்த படத்தை ஆரம்பிக்கும் பணிகளை தொடங்கப் போவதாக பால்கி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செம ட்ரீட்: இளையாராஜாவின் பயோபிக் உருவானால் அது நிச்சயம் இசை ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்றும் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தனுஷ் இந்த படத்தில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











