ஏமாந்து பொண்ண கொடுத்துட்டாங்க.. இவ்வளவு டார்ச்சரா?.. வயிறு எரிந்தது.. தனுஷ் தந்தை ஓபன் டாக்
சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. தற்போது அவர் குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் இட்லி கடை என்கிற படத்தை இயக்கியும் நடித்தும் முடித்திருக்கிறார். அந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் அன்றைய நாள் ரிலீஸாவதால் அநேகமாக இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இந்தச் சூழலில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில்தான் செல்வராகவனும் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அந்த வரவேற்பை பெற முக்கிய காரணமே யுவன் ஷங்கர் ராஜாதான். அவர் கொடுத்த மிகச்சிறந்த பாடல்கள் துள்ளுவதோ இளமைக்கு இளைஞர்களை அழைத்து வந்தது. அதன் காரணமாக படம் நஷ்டமும் இல்லாமல் லாபமும் இல்லாமல் தப்பித்தது.

வளர்ந்துவிட்ட மகன்கள்: துள்ளுவதோ இளமை படத்துக்கு பிறகு தனுஷும், செல்வராகவனும் இணைந்து காதல் கொண்டேன் திரைப்படத்தை கொடுத்தார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முக்கியமாக தனுஷும், செல்வாவும் சினிமாவில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டனர். அந்தப் படத்துக்கு பிறகு அவர்கள் இரண்டு பேரின் மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்து இன்று அவர்கள் இரண்டு பேருமே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் டாப்: முக்கியமாக தனுஷை பற்றி சொல்லவே வேண்டாம். பாலிவுட், ஹாலிவுட் என அவரது உயரம் எங்கோ சென்றுவிட்டது. நடிகராக மட்டுமின்றி இயக்குநராக மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் பவர் பாண்டி தவிர்த்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. அடுத்ததாக தானே நடித்திருக்கும் இட்லி கடை படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அதுமட்டுமின்றி அருண் விஜய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
குபேரா, தேரே இஷ்க் மெய்ன்: இதற்கிடையே சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க செல்வராகவனும் நடிப்பில் படு பிஸியாக இருக்கிறார். மேலும் இயக்கத்திலும் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் அவர் மென்டல் மனதில் என்கிற படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களையும் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அவர்.

கஸ்தூரி ராஜா பேச்சு: இந்நிலையில் கஸ்தூரி ராஜா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நான் எனது மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு கிராமத்து பெண் அவர். அப்போது நான் ஏதோ வேலை செய்துகொண்டிருந்ததால் அவர்கள் வீட்டில் ஏமாந்து எனக்கு பெண்ணை கொடுத்துவிட்டார்கள். அவர் மட்டும் இல்லையென்றால் இன்று இந்த குடும்பமே இல்லை. அதனால்தான் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன்.
யுவன் இல்லைனா தனுஷ் இல்லை: துள்ளுவதோ இளமை படத்தை தயாரித்தோம். யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை. அதுதான் உண்மை. அவ்வளவு அழகாக பாடல்களை கொடுத்தார். தனுஷ் நடிக்கவே வேண்டாம் என்றுதான் வீட்டில் சொன்னார்கள். ஆனால் நான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். செல்வராகவன் மூன்றாவது ஆண்டிலேயே பொறியியல் படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். நானோ படிப்பை முடித்துவிட்டு வா சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
இதானே அக்ரீமெண்ட்: சொன்னதை கேட்டுக்கொண்டு செல்வாவும் அடுத்த நாள் காலேஜ் சென்றார். படிப்பில் கோல்டு மெடலும் வாங்கிவிட்டார். அதற்கு பிறகு என்னிடம் வந்து நீங்கள் சொன்னதை நான் செய்துவிட்டேன். நான் சொன்னதை நீங்கள் செய்யுங்கள் என்று கூறினார். இதுதானே அக்ரீமெண்ட் என்றும் சொல்லிவிட்டார். பிறகு எவ்வளவோ முயன்றும் அவருக்கு உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரே இயக்குநராக மாறிவிட்டார் என்பது தனிக்கதை.

இவ்வளவு டார்ச்சரா?: அதேபோல் தனுஷ் பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது சரி ஷூட்டிங் பார்க்க போகலாம் என்று நான் சென்றிருந்தேன். க்ளைமேக்ஸ் சண்டை காட்சியை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில்தான் தனுஷ் தனது சிக்ஸ் பேக்கை காண்பித்திருப்பார். அந்த ஷூட்டிங்கின்போது ஷாட் இடைவேளையில் வேக வேகமாக ஓடி வந்து தரையில் படுத்துக்கொண்டு ஒர்க் அவுட் செய்து மீண்டும் அதே வியர்வையோடு ஓடி சென்று நடிப்பார். அதை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது. இவ்வளவு டார்ச்சர் செய்தா நாம் நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவு கஷ்டப்பட்டதால்தான் இந்த இடத்தை அவரால் தக்க வைக்க முடிந்தது.
இன்றுவரை உணர்ந்திருக்கிறேன்: அதாவது பிடிவாதமாக தனது மகனிடம் நான் சொல்வதை கேளுடா கேளுடா என சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இன்றுவரை உணரந்துவருகிறேன். ஏனெனில் நான் பிறந்தது 1952ஆம் ஆண்டு. தனுஷ் பிறந்தது 1983ஆம் ஆண்டு. இரண்டு கலாசார இடைவெளிகள் ஒட்டுமா?.. ஒட்டாது. நான் சோளம் சாப்பிட்டேன். இப்போது பீட்சா அது இது என்று என்னென்னம்மோ சாப்பிடுகிறார்கள். எனவே பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யவிட வேண்டும் " என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷின் திருமண வாழ்க்கை: முன்னதாக ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறினர். அதனைத் தொடர்ந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











