Kuberaa Box Office - பெயருக்கேற்றபடி முதல் நாளில் பண மழை கொட்டியதா?.. குபேரா முதல் நாள் வசூல் இதோ
சென்னை: தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் குபேரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சேகர் கம்முலா இயக்கியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத ஆவல் இருந்தது. அதன் காரணமாக தியேட்டர்களில் கூட்டம் சொல்லிக்கொள்ளும்படிதான் இருந்தது. ரசிகர்களும் படத்துக்கு தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட், பாலிவுட் என கலக்கிவரும் தனுஷ் இப்போது டோலிவுட்டிலும் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். முதலில் வாத்தி படத்திலேயே இந்த பிளானை கையில் எடுத்திருந்தர். ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. பிறகு கொஞ்ச காலம் அந்த ஐடியாவை ஓரமாக வைத்த அவருக்கு தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா சொன்ன் கதை பிடித்துப்போக உடனடியாக குபேரா படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் அவர்.
நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். முதன் முறையாக நாகார்ஜுனாவுடனும், சேகர் கம்முலாவுடனும் சேர்ந்து தனுஷ் பணியாற்றியதால் இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் இதன் மீது வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு திருப்திதான்: படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. உச்சக்கட்ட ஆவலோடு தனுஷின் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். அவர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்தான் வர தொடங்கின. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் படத்தின் நிலைமை அப்படி இப்படி இருந்தாலும் நேற்று கூட்டம் நன்றாகத்தான் இருந்தது.
படத்தில் மைனஸும் இருக்கு: ரசிகர்கள் மட்டுமின்றி திரை விமர்சகர்கள்கூட குபேரா படத்தை பாராட்டியே வருகிறார்கள். அதிலும் தனுஷின் நடிப்பை உச்சிமுகர்ந்து கொண்டாடுகிறார்கள். படத்தின் கதை, மேக்கிங், தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸாக இருக்கின்றன. அதேசமயம் படத்தின் நீளம்தான் ஒரு பெரிய குறையாக இருக்கிறது என்றும்; இன்னும்கூட கொஞ்சம் படத்தை ட்ரிம் செய்திருக்கலாம் என்பதும்தான் பெரும்பாலானோரின் கருத்து.
அதுமட்டுமின்றி படத்தின் முதல் பாதி பட்டாசாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல்லடித்துவிட்டது. அதிலும் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தியிருக்கலாம்; மற்றபடி தனுஷின் முந்தைய இரண்டு படங்களை ஒப்பிடுகையில் குபேரா மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் குபேரா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை Sacnilk வலைதளம் வெளியிட்டிருக்கிறது.
எவ்வளவு வசூல்?: அதன்படி முதல் நாளில் அந்தப் படம் மொத்தம் 13 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அந்த வலைதளம் தெரிவித்திருக்கிறது. தெலுங்கில் 8.75 கோடி ரூபாயும், தமிழில் 4.25 கோடி ரூபாயும் வசூல் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் முதல் நாளில் 13 கோடி ரூபாய் என்பது நல்ல எண்கள்தான். பெயருக்கேற்றபடி முதல் நாளில் குபேரா மீது பண மழை கொட்டியிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் பரவிவருவதால் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றே பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











