ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. மருத்துவமனையிலிருந்து தர்மேந்திரா டிஸ்சார்ஜ்.. நிம்மதியில் குடும்பம்
மும்பை: பாலிவுட் திரையுலகின் சீனியர் ஸ்டார்களில் ஒருவரான தர்மேந்திரா உடல்நல குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக உடனே வதந்தி பரப்பிவிட்டார்கள். இதனால் கோபமடைந்த அவரது முதல் மனைவி ஹேமமாலினியும், இரண்டாவது மனைவி பிரகாஷ் கவுரும் காட்டமாக பதிலடி கொடுத்தார்கள். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் தர்மேந்திரா.
ஹிந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா. ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து பாலிவுட் கோட்டையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் அவர். நடிகை ஹேமமாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; அடுத்ததாக பிரகாஷ் கவுர் என்பவரையும் திருமணம் செய்துகொண்டார். இவரது மகன்கள்தான் நடிகர்கள் சன்னி தியோலும், பாபி தியோலும். இவர்களில் பாபிதான் கங்குவா படத்தில் அறிமுகமாகி தற்போது ஜனநாயகன் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர்.
வயோதிக காலத்தில் தர்மேந்திரா: தர்மேந்திராவுக்கு இப்போது 90 வயது ஆகிறது. இதன் காரணமாக அவர் தனது குடும்பத்தினருடன் முழு ஓய்வில் இருந்துவருகிறார். ஒருகாலத்தில் சினிமா, அரசியல் என இரண்டிலும் பம்பரமாய் சுழன்ற அவர் இப்போது அவை இரண்டிலும் நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டும், தனது காலத்தில் நடந்தவற்றையும் அசைபோட்டபடி இருக்கிறார்.

உடல்நல குறைவு: சூழல் இப்படி இருக்க அவருக்கு கடந்த சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. எனவே சிகிச்சை அளிப்பதும் வழக்கமாக தொடர்ந்து கொண்டிருந்தது. அவரை குடும்பத்தினர் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் அவரது உடல்நிலை நேற்று மேலும் மோசமானதன் காரணமாக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரவிய வதந்தி: சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதும்; தர்மேந்திரா உயிரிழந்துவிட்டார் என்று ஒருசிலர் வதந்தியை பரப்பிவிட்டனர். இதனால் பெரிய பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இந்த வதந்தியை பார்த்து கொதித்த நடிகை ஹேமமாலினி, "நடப்பது மன்னிக்க முடியாதது. சிகிச்சை பெற்று குணமடைந்துவரும் ஒருவரைப் பற்றி பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படி பொய் செய்திகளை பரப்ப முடியும். இது மிகவும் அவமரியாதையான மற்றும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்துடைய தனியுரிமைக்கு மரியாதை கொடுங்கள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் மட்டுமின்றி தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி, மகள் ஆகியோரும் காட்டமாகவே பேசியிருந்தார்கள்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்: அவர் உயிரிழக்கவில்லை என்று குடும்பத்தினர் உறுதி செய்த பிறகு ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வந்திருக்கிறது. அதாவது மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த தர்மேந்திரா சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார். இருப்பினும் வீட்டிலும் மருத்துவர்கள் கண்காணிப்பில்தான் இருப்பார் என்றும்; தேவையான சிகிச்சை அங்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











