தீனா ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் இப்படி செய்யலாமா? அஜித் - விஜய் ரசிகர்கள் மோதல் வெடிக்குமா?
சென்னை: நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தியேட்டரில் தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. படம் வெளியான தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ஆட்டம் போட்டு வருகின்றனர். மேலும், கில்லி படம் ஓடும் தியேட்டருக்கு சென்ற அஜித் அஜித் என்று கத்தி வருவதால், இரண்டு ரசிகர்களுக்கும் இடையே சண்டை உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தீனா. இந்த படத்தில் அஜித், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா, மகாநதி சங்கர், நக்மா, பாலசிங்கம் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்த திரைப்படம் தியேட்டரில் சம்பவம் செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது: தீனா திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையினை ஏற்படுத்திய படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்த படம் வெளியான பிறகு தான், அஜித் ரசிகர்கள் அவரை அன்போடு தல என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதற்கு காரணம் இந்த படத்தில் வரும் வசனம் தான். 'தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது' என்னும் வசனத்தை ஸ்டண்ட் மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார். அதில் இருந்து, தல என்பது அஜித்தின் செல்லப்பெயராக மாறிவிட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்குப் முன், தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும், அஜித் அல்லது ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார். ஆனால், ரசிகர்களோ நீங்க எப்போதும் எங்க தல என்று, அப்படியே அழைத்து வருகின்றனர்.
தீனா ரீ ரிலீஸ்: அஜித்தின் 53வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்த நாளுக்கு அஜித்தின் மனைவி ஷாலினி டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தீனா திரைப்படம் தியேட்டரில் இன்று ரீ ரிலீஸ் ஆனது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தீனா வெளியானதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த படத்தில் வரும் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் திரையில் ஒலித்துக் கொண்டிருந்த போது, ரசிகர்கள் இருக்கையில் இருந்து இறங்கி நடனமாடியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி செய்யலாமா?: இந்நிலையில், விஜய் நடித்த கில்லி ரீ ரிலீஸாகி வசூலை அள்ளி வருகிறது. இத்திரைப்படம் இரண்டு வாரத்திற்கு மேலாக வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரோகினி தியேட்டரில் கில்லி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, தியேட்டருக்குள் வந்த ரசிகர்கள் கதவை திறந்து, அஜித்... அஜித் என ஆட்டம் போட்டு அலப்பறை செய்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர்,ன அஜித் ரசிகர்கள் இப்படி செய்யலாமா? என்றும், ரசிகர்கள் இதுபோல நடந்துக்கொள்வது அஜித் - விஜய் ரசிகர்களிடையனே மோதலாக உருவாகிவிடும் என்று கருத்துக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











