Ilayaraaja - நான் எடுத்த வாந்தியை நானே எப்படி சாப்பிடுறது.. இயக்குநரிடம் சீறிய இளையராஜா
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்த சூழலில் தினந்தோறும் படத்தின் இயக்குநர் நாகராஜ் இளையராஜா பற்றி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.

அன்னக்கிளி: அன்னக்கிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
இயக்குநர்களின் காத்திருப்பு:இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜிக்கு மூன்று கதைகளுக்கும், வட்டார வழக்கு படத்துக்கு இசையமைத்தார். மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி என்பதை. அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.
கர்வம்: இளையராஜாவுக்கு இப்படி பல பெருமைகள் இருந்தாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுவதுண்டு. அதாவது அவர் யாரையும் மதிப்பதே இல்லை; தான் மட்டுமே இசையமைப்பாளர் என்ற மிகப்பெரிய கர்வத்தில் இருக்கிறார் என்றும் பலர் கூறுவார்கள். அதேசமயம் அவர் கர்வமாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அவரைப் போன்ற ஒரு திறமையாளரை இனி யாராலும் பார்க்கவே முடியாது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
நாகராஜ் பேட்டி: இந்நிலையில் தினந்தோறும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நாகராஜ் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர், "ஆகாயம் என்ற படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்க முடிவு செய்தோம். அவரிடம் சென்று ஒரு இடத்தில் கதையை கூறினேன். நான் கதை சொல்லும்போது எந்த இடையூறும் இல்லாமல் முழுமையாகவும் கவனமாகவும் கேட்டார்.
சீறிய இளையராஜா: கதையை கேட்டு முடித்ததும் 4 ட்யூன்களை அந்த இடத்தில் வைத்தே போட்டார். நான் பிடிக்கவில்லை என்று சொன்னேன். உடனே அவர் என்னிடம், உனக்கு இதில் என்ன பிடிக்கவில்லை என்று கேட்டார். நான் உடனே, சார் எனக்கு காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற உங்களுடைய பாட்டான என்னை தாலாட்ட வருவாளா மாதிரியான ஸ்டைலில் வேண்டும் என்று கேட்டேன்.
உடனே கோபமடைந்த அவர் நான் எடுத்த வாந்தியையே என்னை திருப்பி சாப்பிட சொல்றியா. அது எப்படி என் பாட்டு. அது வெளில வந்துட்டா அது உங்களுடைய பாட்டு என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அமர்ந்து வேறு ட்யூன்களை போட்டுக்கொடுத்தார். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்தப் படத்தை சில காரணங்களால் தொடங்க முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











