தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் நிலைமை என்ன?.. திடீரென வெளியான அறிவிப்பு
சென்னை: தோனி தயாரிக்கும் தமிழ் படமான லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல வருடங்கள் கேப்டனாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். அவரை ரசிகர்கள் தல தோனி என்றும் அழைப்பார்கள். தோனியும், தமிழ்நாடு எனக்கு இரண்டாம் தாய் வீடு என பலமுறை நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

சினிமாவில் களமிறங்கும் தோனி
கிரிக்கெட்டில் கலக்கிய தோனி அதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் களமிறங்கவிருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் எந்த ரோலை அவர் சினிமாவில் எடுக்கப்போகிறார் என்பது பெரும் சஸ்பென்ஸாகவே இருந்தது. அதனையடுத்து தோனி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதற்காக அவரும் அவரது மனைவியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

தோனியின் முதல் தமிழ் படம்
சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து தோனி எந்த மொழியில் தனது முதல் படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டின் மேல் அவருக்கு இருக்கும் அன்பை பறைசாற்றும்விதமாக தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.

லெட்ஸ் கெட் மேரிட்
அதன்படி தோனி தயாரிக்கும் முதல் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி தயாரிக்கிறார். ஹரிஷ் கல்யாண், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்தப் படமானது கடந்த ஜனவரி 27ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

எல்ஜிஎம் படத்துக்கு என்ன ஆனது?
பூஜையுடன் தொடங்கப்பட்டாலும் அதன் பிறகு படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால் படத்தின் ஷூட்டிங் நடக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திற்கு ரசிகர்கள் ஆளாகினர். இந்தச் சூழலில் தோனி என்டெர்டெயின்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில், "எல்.ஜி.எம் திரைப்படத்தின் பணிகள் தொடர்பாக நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம். தோனி தயாரிக்கும் முதல் படம் இது. மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.
இதனையடுத்து தோனி என்டர்டெயின்மென்ட்ஸின் படைப்பு திறன் தலைவர் பிரியன்ஷு சோப்ரா கூறுகையில், "எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பு வேகம் மற்றும் தயாராகும் பணி ஆகிய இரண்டிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதன் திரைக்கதை சிறந்த பொழுதுபோக்கு படைப்பாக மாற்றம் பெறுவதை உடனிருந்து காண்கிறேன். இதன் காரணமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான நேரத்தில் இந்தப் படம் முழுமையாக நிறைவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











