Dhoni: யோகிபாபுவுக்கு சிஎஸ்கேவில் இடம்.. கேப்டன் தோனி கலகல!
சென்னை: நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகிபாபு, நதியா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் LGM (Lets get Married).
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தன்னுடைய தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின்மூலம் சிஎஸ்கே கேப்டன் தோனி, படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

யோகிபாபுவிற்காக சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேச தயாராகும் தோனி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன், தற்போதைய சிஎஸ்கே கேப்டன் என பிரபலமாகியுள்ள கிரிக்கெட் வீரர் தோனி, அடுத்தடுத்த இன்வெஸ்ட்மெண்ட்களை செய்து வருகிறார். விவசாயம் சார்ந்த விஷயங்களிலும் இவர் முதலீடுகளை செய்து வருகிறார். அந்தவகையில் சினிமா தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் மூலம் இவர் தற்போது தமிழில் தன்னுடைய முதல் படத்தை தயாரித்து வருகிறார்.
ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள LGM (Lets get married) என்ற படத்தை தன்னுடைய மனைவி சாக்ஷி தோனி மூலம் தோனி தயாரித்து வருகிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் சாக்ஷி தோனி கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்டைல் லுக்கில் கலக்கிய தோனி, இசை மற்றும் ட்ரெயிலரை வெளியிட்டார். நிகழ்ச்சியை பிரபல ஆங்கர் பாவனா தொகுத்து வழங்கினார். அவர் தோனியிடம் பல கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார். சிஎஸ்கேவில் ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு பதிலாக அணியில் யோகிபாபுவை சேர்த்துக் கொள்வீர்களா என்று கேட்டு, நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். ஆனால் இந்த கேள்விக்கு தோனியும் சளைக்காமல் பதிலளித்தார்.
யோகிபாபுவிற்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்பது எனக்குத் தெரியும் என்றும் அவருக்காக தான் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேச தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் யோகிபாபு பயிற்சிக்கும் மேட்ச்சிற்கும் தடங்கல் இல்லாமல் கால்ஷீட் கொடுத்தால் அவருக்காக தான் பேசத் தயார் என்றும் தோனி குறிப்பிட்டார். இதனால் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி களைகட்டியது. முன்னதாக யோகிபாபுவின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து அறிந்த தோனி, அவருக்கு தன்னுடைய கையெழுத்து போட்ட பேட்டை பரிசாக கொடுத்திருந்தார்.
இந்த கிப்டை LGM குழுவினர் யோகி பாபுவிடம் கொடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் யோகிபாபு. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டானது.பேமிலி என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய தோனி, தன்னுடைய மனைவிதான் தன்னை படம் தயாரிக்க அட்வைஸ் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











