துருவ் விக்ரமுக்கு தேவயானி கணவர் அட்வைஸ்.. விண்ணுக்கும் மண்ணுக்கும் மாதிரி படத்தில் நடிக்கணுமாம்
சென்னை: துருவ் விக்ரமுக்கு பைசன் திரைப்படம் மிகப்பெரிய தொடக்கமாக திரைத்துறையில் அமைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு சீனிலும் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள்; மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் இத்தனை வருடங்கள் காத்திருந்தது நடித்தது ரொம்பவே சரிதான் என்று புகழாரம் சூட்டினார்கள். இந்நிலையில் தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன் துருவ்வுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
சியான் விக்ரமின் மகனான துருவ் முதலில் பாலாவின் இயக்கத்தில் அறிமுகமாவதாக இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரமுக்காகவும், துருவ்வுக்காகவும் ரீமேக் செய்ய ஒத்துக்கொண்டு தனது ஸ்டைலில் படமாக்கியிருந்தார் பாலா. ஆனால் அது விக்ரம் உள்ளிட்ட சிலருக்கு பிடிக்காததால் அதை தூக்கி தூரமாக வைத்துவிட்டு வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரி ரீமேக்கினார்கள். படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் சேர்ந்து மகான் படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு முழுமையான பெயரை பெற்றுக்கொடுக்கவில்லை.
பைசன் - காளமாடன்: திரைத்துறையில் எப்படியாவது தனது தந்தை போன்று வென்றுவிட வேண்டும் என்று இருந்தவருக்கு; மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்துக்காக இரண்டரை வருடங்கள் காத்திருந்தார்; முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனிடம் பயிற்சி பெற்றார்; திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வாழ்வியலையும் அங்கு சென்று இருந்து கற்றுக்கொண்டார்.

படம் மெகா ஹிட்: இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியானது. மாரி செல்வராஜ் வழக்கம்போல் படத்தை தரமாக கொடுக்க மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் 50 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்து கெத்து காண்பித்தது. முக்கியமாக துருவ்வின் நடிப்புக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஒவ்வொரு சீனிலும் துருவ்வின் உழைப்பும், நடிப்பும் பிரமிக்க வைத்ததாக தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
துருவ்வும் செம ஹேப்பி: நிச்சயமாக இந்தப் படம்தான் துருவ்வுக்கு முதல் படமாக எடுத்துக்கொள்ள வேண்டும்; இனிமேல் அவரது பயணம் முழு வேகத்தில் இருக்கும் என்றும் கூறினார்கள் ரசிகர்களும், விமர்சகர்களும். பைசன் கொடுத்த வெற்றி துருவ்வுக்கு மேற்கொண்டு பொறுப்பை அதிகரித்திருப்பதால் அடுத்தடுத்த கதைகளை நிதானத்துடனும், பொறுமையுடனும் தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு அவரை நகர்த்தியிருப்பதாகவும்; கில் படத்தின் ரீமேக்கில் நடிப்பதைகூட வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
தேவயானி கணவர் அட்வைஸ்: இந்நிலையில் தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "விக்ரம் மகன் துருவ் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் மாதிரி அவர் ஒரு படத்தில் நடித்தால்தான் மக்களிடம் ஹீரோவாக போய் சேருவார். சினிமா நிறைய மாயாஜாலம் அடங்கிய அற்புதமான விஷயம். அதற்கு நிறைய அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. முதலில் சினிமா என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











