Dhruv Vikram: டீலில் விட்ட மாரி செல்வராஜ்... இயக்குநரை மாற்றிய துருவ் விக்ரம்... உருவானது புது காம்போ
சென்னை: சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவரது அப்பா விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மஹான் படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் துருவ் விக்ரம்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என்பதால் இன்னொரு இயக்குநருடன் இணையவுள்ளாராம் துருவ்.
துருவ் விக்ரமின் புதிய கூட்டணி: கோலிவுட்டின் வெரைட்டியான நடிகர்களில் முக்கியமானவர் சீயான் விக்ரம். அவரது மகன் துருவ் விக்ரமும் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தெலுங்கில் வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் அறிமுகமானார் துருவ். முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற டைட்டிலில் தொடங்கிய இந்தப் படம் பின்னர் கிரீஷாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியானது.

அதன்பின்னர் அவரது அப்பா விக்ரமுடன் இணைந்து மஹான் படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. முதல் இரண்டு படங்களுமே பெரிய அளவில் அறிமுகம் கொடுக்கவில்லை என்றாலும் துருவ் விக்ரம் மீது கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதேநேரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார் துருவ் விக்ரம்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்திருந்த மாரி செல்வராஜ், துருவ் விக்ரமுடன் இணைந்தது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. இந்தப் படம் கபடி விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாக இருந்ததால் அதற்காக துருவ் விக்ரம் பயிற்சிகளும் எடுத்து வந்தார். ஆனால், திடீரென உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கச் சென்றுவிட்டார் மாரி செல்வராஜ்.
இந்த கேப்பில் இசையில் அதிக ஆர்வம் காட்டிய துருவ் விக்ரம், ஒரு மியூசிக் ஆல்பத்தையும் வெளியிட்டிருந்தார். அதேநேரம் புதிய படத்திற்காக பல இயக்குநர்களிடமும் கதை கேட்டு வந்தார். அதில் இயக்குநர் கணேஷ் பாபு சொன்ன கதை பிடித்திருந்ததால் துருவ் விக்ரமும் உடனே ஓக்கே சொல்லிவிட்டாராம். கவின், அபர்ணா நடித்த டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு, துருவ் விக்ரமுக்கு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் - கணேஷ் பாபு இயக்கும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. மாரி செல்வராஜுக்காக காத்திருந்த துருவ் விக்ரம் நீண்ட நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. மாமன்னன் முடித்துவிட்டு தற்போது வாழை படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். அதனால் தான் கணேஷ் பாபு படத்தில் கமிட்டாகிவிட்டாராம் துருவ் விக்ரம்.


Click it and Unblock the Notifications











