Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்... உயர் நீதிமன்றத்தில் கெளதம் மேனன் உறுதி!
சென்னை: சீயான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் இன்று (நவ.24) திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போவதாக இயக்குநர் கெளதம் மேனன் ட்வீட் செய்திருந்தார்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெளதம் மேனன் பணம் கொடுக்க வேண்டியது இருந்ததால், துருவ நட்சத்திரம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கெளதம் மேனன் உறுதி கொடுத்துள்ளார்.
துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்: விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் முதன்முறையாக உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். முன்னதாக இக்கூட்டணி காக்க காக்க படத்தில் இணையவிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று வெளியாகவிருந்த துருவ நட்சத்திரம் திடீரென ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தப் படம், பல தடைகளைக் கடந்து இன்று வெளியாகவிருந்தது.
ஆனால், தொடர்ச்சியாக ரிலீஸ் நேரத்தில் சிக்கல்களை சந்தித்து வருகிறது துருவ நட்சத்திரம். ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக தான் இந்தப் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிம்புவை ஹீரோவாக நடிக்க வைத்து 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்கவிருந்தார் கெளதம் மேனன். இக்கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என மூன்று படங்கள் உருவாகியுள்ளன.
ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலில் உருவாகவிருந்த படத்துக்காக, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால், அதனை அவர் இப்போது வரை திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல், கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் ரிலீஸாகக் கூடாது என, தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தது ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், கெளதம் பணம் கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார். சிம்புவின் சூப்பர் ஸ்டார் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2.40 கோடி பணத்தை, வரும் திங்கள் அல்லது புதன் கிழமைக்குள் தரப்படும். பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் என கெளதம் மேனன் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். இதனால், துருவ நட்சத்திரம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரமுடன் சிம்ரன், ரிது வர்மா, பார்த்திபன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள துருவ நட்சத்திரம், கெளதம் மேனனின் ட்ரீம் மூவி என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் செம்ம ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இது, மிகப் பெரிய வெற்றிப் பெறும் என கெளதம் மேனன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











