Vikram: மலேசியாவில் இருந்து துருவ நட்சத்திரம் அப்டேட்... விக்ரம் ரசிகர்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ட்ரீட்
சென்னை: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்தாண்டு வெளியாகவுள்ளது.
இதனையடுத்து இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட்டை வரும் 17ம் தேதி மலேசியாவில் இருந்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் துருவ நட்சத்திரம் அப்டேட்: கோலிவுட்டின் வெரைட்டியான ஹீரோவாக வலம் வரும் சீயான் விக்ரம், தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார். 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனாலும் நீண்ட நாட்களாகவே வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் 'John will meet you soon' என்ற கேப்ஷனுடன், துருவ நட்சத்திரம் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இதனால் விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த போஸ்டரை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்ஜும் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்திருந்தார்.
அதில் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை வேலைகள் தொடங்கியதாக தெரிவித்திருந்தார். மேலும், 9.1.4 டால்பி இசைக் கலவையில் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் இரண்டுமே ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டுமே மலேசியாவில் இருந்து வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 17ம் (ஜூன் 17) தேதி ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுகிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளார்களாம். அதன்படி, சீயான் விக்ரம், கெளதம் மேனன் உள்ளிட்டோர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மலேசியா செல்லவுள்ளனர். அப்போது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் இரண்டையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இதனால், விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விக்ரம் நடித்திருந்த பொன்னியின் செல்வனில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டு கிடைத்தது. ஆனால், அது மணிரத்னத்தின் படமாகவே பார்க்கப்பட்டது. அதனால் கடுப்பில் இருந்த விக்ரம் ரசிகர்களுக்கு துருவ நட்சத்திரம் செம்ம ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் வெளியானதும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதில் விக்ரம் பங்கேற்பாரா என எதுவும் அப்டேட் இல்லை.


Click it and Unblock the Notifications











