Dhurandhar 2 Day 4 Box Office - துரந்தர் 2 நான்காவது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசு
மும்பை: ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா, சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துரந்தர் 2. கடந்த வருடத்தில் முதல் பாகம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து கடந்த 19ஆம் தேதி இரண்டாவது பாகம் ரிலீஸானது. முதல் பாகம் இதுவும் சூப்பர் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் படத்தில் கூறப்பட்ட சில கருத்துக்கள் பலருக்கும் ஏற்புடையதாக இல்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் படம் பட்டையை கிளப்புகிறது.
இந்திய அளவில் ஃபேமஸான நடிகரான ரன்வீர் சிங்கும், ஆதித்யா தாரும் துரந்தர் படத்துக்காக கூட்டணி வைத்தார்கள். அதன்படி படத்தின் முதல் பாகமானது கடந்த வருடம் ரிலீஸானது. பாகிஸ்தானுக்கு சென்று இந்திய உளவாளி செய்யும் விஷயங்களும், தீவிரவாதிகளிடமிருந்து நாடு எப்படி காப்பாற்றப்படுகிறது என்பதையும் அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. தேச பக்தி படங்கள் எப்போதுமே வட மாநிலங்களில் ஜோராக கல்லா கட்டும். அதன்படி முதல் பாகமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

துரந்தர் 2: படத்தின் முதல் பாக முடிவிலேயே இரண்டாவது பாகத்துக்கான லீடையும் இயக்குநர் ஆதித்யா வந்திருந்தார். மேலும் முதல் பாகம் எடுக்கும்போதே இரண்டாவது பாகத்துக்கான 90 விழுக்காடு வேலைகளை படக்குழு முடித்துவிட்டதாம். எனவே மார்ச் 19ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு; சொன்னபடி அன்றைய தினம் ரிலீஸானது. முதல் பாகம் பெற்ற வெற்றி இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு பெருக்கி வைத்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் ஹிந்தியில் மட்டும் வெளியான அப்படம்; ஒரு நாள் தாமதமாக தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
எப்படி இருக்கிறது படம்?: படம் மொத்தம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடுகிறது. வழக்கம்போல் இதிலும் தேச பக்தியை ஓவர் டோஸாகவே இயக்குநர் கொடுத்திருந்தார். அதோடு மட்டுமின்றி கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி செய்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன. அவை எல்லாம் தென் மாநிலங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றாலும்; வட மாநிலங்களில் படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
படம் சூப்பர் ஹிட்; படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சி: விமர்சன ரீதியாக படம் அப்படி இப்படித்தான் ரிசல்ட்டை பெற்றிருக்கிறது. படத்தின் சில காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால்; நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. செம விறுவிறுப்பாக படத்தை இயக்குநர் கொண்டு சென்றிருக்கிறார் என பலரும் புகழ்கிறார்கள். ஆகமொத்தம் முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகும் ஹிட்டாகிவிட்டதால் துரந்தர் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
வசூலில் சக்கைப்போடு போடும் துரந்தர் 2: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி நான்காவது நாளான நேற்று 114.85 கோடி ரூபாயை இந்தியாவில் மட்டும் அப்படம் வசூலித்திருப்பதாகவும்; இதுவரை நான்கு நாட்களில் மொத்தம் 449 கோடி ரூபாயை இந்தியாவில் அள்ளியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக முதல் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதையெல்லாம் இப்படம் முறியடித்து 2000 கோடி ரூபாய்கூட வசூலிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications















