புஷ்பாவை தொட இன்னொருத்தன் பொறந்து வரணும் போல.. புஷ்பா 2 முதல் நாள் வசூலை முறியடிக்காத துரந்தர் 2!
சென்னை: ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்: தி ரிவென்ஜ்'. மார்ச் 19, வியாழக்கிழமை வெளியான இப்படம், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சுனாமி போலக் கிளம்பி, முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் மாபெரும் அலைகளை உண்டாக்கி, திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 முதல் நாள் வசூல் சாதனையை துரந்தர் 2 முறியடிக்கவில்லை. இந்தியாவிலும் இந்த படத்துக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.
சாக்னிக் (Sacnilk) தகவல்படி, 'துரந்தர்: தி ரிவென்ஜ்' திரைப்படம் முதல் நாளில் ₹102.55 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. மேலும், வெளியீட்டிற்கு முந்தைய நாள் (புதன்கிழமை) நடத்தப்பட்ட பெயிட் ப்ரீமியர் மூலம் கூடுதலாக ₹43.00 கோடி வசூலானது. இதன் மூலம் படத்தின் இதுவரையிலான வசூல் ₹145.55 கோடியாக உயர்ந்து, ஒரு பலமான தொடக்கத்தை அளித்தது.

முதல் நாள் வசூலில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்', பிரபாஸின் 'ஆதிபுருஷ்' மற்றும் 'சலார்', 'கல்கி 2898 AD', ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா: பாகம் I', ரஜினிகாந்தின் 'கூலி' போன்ற பல பெரிய இந்தியப் படங்களின் சாதனைகளை 'துரந்தர் 2' முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் தொடக்கமாக பதிவாகியுள்ளது.
ஸ்பெஷல் ப்ரீமியரில் சாதனை: பெயிட் ப்ரீமியர் மூலமாக 12,735 திரையீடுகளில் 51.0% சதவீதம் ஹவுஸ்ஃபுல் ஆகின. இது அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களிடையே இருந்த ஆர்வத்தைக் காட்டியது. முதல் நாளான வியாழக்கிழமை திரைப்படம் 21,728 காட்சிகளில் திரையிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக 59.5% சீட் ஃபில்லிங்குடன் பெரும் வசூலை ஈட்டியுள்ளது.
பாலிவுட்டையே பதற வைத்த துரந்தர் 2: 'துரந்தர் 2' படத்தின் முதல் நாள் வசூலில் பெரும்பாலும் இந்தித் திரையிடல்கள் கணிசமாக பங்களித்தன. 19,500 காட்சிகளில் 73.6% சீட் ஃபில்லிங் விகிதத்துடன் ₹99.10 கோடி நிகர வசூலை இந்திப் பதிப்பு பெற்றது. தெலுங்குப் பதிப்பு, 1,112 காட்சிகளில் 59.0% விகிதத்துடன் ₹2.12 கோடியைப் பதிவு செய்தது.
தமிழ்நாட்டில், 958 காட்சிகளில் 39.0% விகிதத்துடன் ₹1.16 கோடி வசூல் செய்தது. கன்னடப் பதிப்பு 62 காட்சிகளில் 46.0% விகிதத்துடன் ₹0.08 கோடியையும், மலையாளப் பதிப்பு 96 காட்சிகளில் 80.0% விகிதத்துடன் ₹0.09 கோடியையும் ஈட்டியது.
4வது இடம் தான்: இந்தியாவிலேயே அதிக வசூல் ஈட்டிய முதல் நாள் படங்களின் பட்டியலில், 'துரந்தர்: தி ரிவென்ஜ்' ₹102 கோடி வசூலுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா: தி ரூல்' ₹164 கோடி வசூலுடன் முதல் இடத்திலும், 'RRR' ₹133 கோடியுடனும், 'KGF சாப்டர் 2' ₹116 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
முதல் பத்து இடங்களுக்குள் பிரபாஸின் 'கல்கி 2898 AD' ₹95 கோடியுடனும், 'சலார்' ₹91 கோடியுடனும் வந்துள்ளன. 'ஆதிபுருஷ்' ₹87 கோடி, 'தேவரா' ₹83 கோடி, 'ஜவான்' ₹75 கோடி, 'கூலி' ₹65 கோடி என மற்ற முக்கியப் படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 'துரந்தர் 2' ஒரு வலுவான போட்டியாளராக தனது இடத்தைத் தக்கவைக்கிறது.
புஷ்பா 2வை முறியடிக்கவில்லை: முதல் நாள் வசூலில் 'துரந்தர் 2' திரைப்படம் 'புஷ்பா 2'ஐ முறியடித்ததா? என்கிற கேள்விக்கு இல்லை என்பது மட்டுமே பதிலாக உள்ளது. 'துரந்தர் 2' முதல் நாளில் 'புஷ்பா 2'ஐ மிஞ்சத் தவறிவிட்டது. இந்தியாவின் முதல் நாள் வசூல் பட்டியலில் 'புஷ்பா: தி ரூல்' இன்றும் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது.
மேலும், உலகளவில் 223 கோடி ரூபாய் கிராஸ் கலெக்ஷனை மட்டுமே துரந்தர் 2 பெற்றுள்ளது என்றும் புஷ்பா 2 திரைப்படம் 290 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், 2வது இடத்தை RRR படத்துடன் துரந்தர் 2 ஷேர் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ உலக வசூலை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











