தலையை துண்டித்து உதைக்கும் காட்சியை நீக்கிய சென்சார் போர்ட்.. துரந்தர் 2 ரன் டைம் குறைப்பு!
மும்பை: வெகுநாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான பெய்ட் ப்ரீமியர் காட்சிகள் இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணி முதல் திரையிடப்பட உள்ளன. இந்நிலையில், இப்படம் குறித்த மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) அறிக்கை ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் வெளியாகும் படத்தின் ஓடும் நேரத்தில் செய்யப்பட்ட வெட்டுக்கள், திருத்தங்கள் மற்றும் சில காட்சிகள் மாற்றப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
சான்றிதழ் விவரங்களின்படி, 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் இறுதி ஓடும் நேரம் 3 மணி நேரம், 49 நிமிடங்கள் மற்றும் 36 வினாடிகளாகும். CBFC-க்கு சமர்ப்பிக்கப்பட்ட பதிப்பு தோராயமாக 3 மணி நேரம் 51 நிமிடங்கள் இருந்தது. வாரியத்தின் கூடுதல் 1.3 நிமிட வெட்டுக்களுக்குப் பிறகு, இப்போது படத்தின் ஓடும் நேரம் வெளிநாட்டுப் பதிப்பை (சுமார் 3 மணி நேரம் 55 நிமிடங்கள்) விட 6 நிமிடங்களுக்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் அறிக்கையின்படி, மொத்தம் 21 முக்கிய மாற்றங்களில் 4 காட்சிகள் மிகக் கடுமையான வன்முறைக் காட்சிகளாக அடையாளம் காணப்பட்டு திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. "கண்ணை நசுக்குதல்," "தலையை துண்டித்து உதைத்தல்," "சிமென்ட் பிளாக் கொண்டு தலையில் அடித்தல்," மற்றும் "சுத்தியலால் தலையில் அடித்தல்" போன்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 24 வினாடிகள் கொண்ட "தலையை துண்டித்து உதைத்தல்" காட்சி முழுமையாக நீக்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
ஓவர் வன்முறை காட்சிகளுக்கு வெட்டு: இந்த வெட்டுக்கள் குறித்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது. ஒருவர், "பக்கா A ரேட்டட் படம் தானே, இதை ஏன் செஞ்சுருக்கீங்க?" என்று கேட்டார். மற்றொரு ரசிகர், "துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்திலிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு காட்சியை CBFC சென்சார் செய்துள்ளது" என்று வருத்தம் தெரிவித்தார். இன்னொருவர், "CBFC 'A' சான்றிதழ் கொடுத்தும், துரந்தர் இந்தியாவில் சென்சார் செய்யப்பட்டுள்ளது, ஆனால் வெளிநாடுகளில் வெட்டுக்கள் இல்லை" என அதிருப்தி வெளியிட்டார்.
கத்தரி போட்ட சென்சார்: கடுமையான வன்முறை, ஆபாச மொழி அல்லது உணர்ச்சிகரமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படக் காட்சிகளில் திருத்தங்கள் கோருவதாக இந்திய CBFC பலமுறை விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இருப்பினும், இந்த திருத்தங்களுக்குப் பிறகும், 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்களில் மிக நீண்ட ரன் டைம் கொண்ட படமாகவே உள்ளது.
மெகா வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் வலுவான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. முன் வெளியீட்டு முன்பதிவுகள் வழியாகவே ₹ 41.24 கோடி வசூலித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளையும் சேர்த்தால், படத்தின் மொத்த வசூல் சுமார் ₹ 46 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ஆதித்யா தர் இயக்கியுள்ளார். சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ஆர். மாதவன், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர் மற்றும் யாமி கவுதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த அழுத்தமான திரைப்படம் இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகிறது. புஷ்பா 2, பாகுபலி 2 போன்ற டோலிவுட் மெகா பிளாக்பஸ்டர் படங்களின் வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்பதை வெயிட் பண்ணிப்பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











