டாக்ஸிக் படத்துக்கு சென்சார் கிடைக்குமா?.. துரந்தர் 2 தள்ளிப்போகிறதா?.. ஜனநாயகன் vs பராசக்தி டிராமா?
சென்னை: ஜன நாயகன் படத்தை போலவே கேவிஎன் தயாரித்துள்ள டாக்ஸிக் படம் பல ஏரியாக்களில் அதிக தொகை கொடுத்து விநியோகம் செய்யப்பட்டு மார்ச் 19ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த படம் சென்சார் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2 ஆகிய இரு பெரிய படங்களும் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயம் டாக்ஸிக் படக்குழு காட்டும் வேகத்தைப் போல துரந்தர் 2 படக்குழு எந்தவொரு ரிலீஸ் வேலைகளையோ புரமோஷன்களையோ இதுவரை ஆரம்பித்தது போல தெரியவில்லை.

இன்னும் 20 நாட்களில் 2 படங்களும் திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது ஜனநாயகன் vs பராசக்தி டிராமா போல ஏதாவது கடைசி நேர ட்விஸ்ட் வருமா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.
ஜன நாயகன் vs பராசக்தி: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஓவர்சீஸில் எல்லாம் டிக்கெட் புக்கிங்கே தொடங்கப்பட்டு சுமார் 60 கோடி அளவுக்கு பிசினஸ் நடந்து பின்னர் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ரீபண்ட் வழங்கிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறினர்.
ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு கடைசி நேரத்தில் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக ஜனவரி 10ம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி திணிப்பு எதிர்ப்பை மையப்படுத்தி வெளியான பராசக்தி படத்துக்கு கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைத்து படம் வெளியானது. ஆனால், சென்சார் சான்றிதழுக்காக நீதிமன்றத்தை நாடிய ஜன நாயகன் படத்துக்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியாகாமல் இருக்கிறது.
டாக்ஸிக் படத்துக்கு சென்சார்: கேவிஎன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் மூன்று வேடங்களில் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்ட பல டாப் நடிகைகள் நடித்துள்ளனர். அந்த படம் மார்ச் 19 கண்டிப்பாக வெளியாகும் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த படம் இன்னமும் சென்சார் சான்றிதழை பெறவில்லை. ஏற்கனவே வெளியான டீசரில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சைகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கண்டிப்பாக ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.
துரந்தர் 2 தள்ளிப்போகிறதா?: ஜனநாயகன் படத்தின் வழக்கை வாபஸ் வாங்கிய கேவிஎன் நிறுவனம் கண்டிப்பாக யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்துக்கான சென்சார் சான்றிதழை வாங்கி படத்தை கண்டிப்பாக திட்டமிட்டபடி ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டாக்ஸிக் திரைப்படம் தான் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என்றும் துரந்தர் 2 ரிலீஸ் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அதனால் தான் துரந்தர் 2 படக்குழு இன்னமும் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவில்லை என்கின்றனர். கடைசியில் துரந்தர் 2 வெளியாகி டாக்ஸிக் வெளியாகாமல் போனால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கும் என்கின்றனர். சினிமாவை சுற்றி நடக்கும் அரசியல்களும் அரசியலை சுற்றி நடக்கும் சினிமாக்களும் காமெடியாகத்தான் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications