காதல் கணவரை பிரிகிறேன்: ட்விட்டரில் குண்டை தூக்கிப் போட்ட நடிகை
மும்பை: கணவரை பிரிவதாக பாலிவுட் நடிகை தியா மிர்ஸா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
அரவிந்த்சாமியின் என் சுவாசக் காற்றே படத்தில் டான்ஸராக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் தியா மிர்சா. பின்னர் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அவர் போட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகள் கழித்து தானும், கணவரும், பிசினஸ் பார்ட்னருமான சாஹில் சங்காவும் பிரிவது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்று ட்வீட் செய்துள்ளார் தியா மிர்சா.
பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம். இது குறித்து நாங்கள் மேலும் எதுவும் தெரிவிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் தியா. பாலிவுட்டில் ரொம்ப டீசன்டான நடிகை என்று ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர் தியா. தான் உண்டு, தன் வேலை உண்டு, சமூக சேவை உண்டு என்று இருப்பவர் அவர்.
அப்படி இருப்பவர் வாழ்விலும் விவாகரத்தா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். நிஜமாகவே கணவரை பிரிகிறீர்களா, ஏன் இந்த முடிவு, கேட்கும் எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறதே என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாத தியா ட்விட்டரில் கணவரை பிரிவதாக அறிவித்தது திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தியா மிர்சாவின் திருமணம் இப்படி விவாகரத்தில் முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
தியாவுக்கும், சாஹிலுக்கும் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பு அவர்கள் 5 ஆண்டுகள் காதலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











