இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை புறக்கணிக்கவே இமயமலை சென்றாரா ரஜினிகாந்த்?.. பாவம் லைகா நிறுவனம்!
சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களை இதுவரை இயக்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு கடைசியாக 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து 5 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

லைகா தயாரிப்பில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இமயமலை கிளம்பி சென்றுவிட்டார்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா: இந்தியன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் மிகச்சிறந்த ஆல்பத்தை போட்ட நிலையில், இந்தியன் 2 படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைத்திருந்தார் ஷங்கர். அவரது இசையில் உருவான 'பாரா' மற்றும் 'நீலோற்பம்' சமீபத்தில் வெளியான நிலையில், மீதமுள்ள பாடல்கள் இன்று பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அனிருத்தின் லைவ் பெர்ஃபார்மன்ஸ் உடன் அரங்கேறும் என தெரிகிறது. சிறப்பு விருந்தினராக சிம்பு, சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த மாதம் ரிலீஸ்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, விவேக், நெடுமுடி வேணும் உள்ளிட்ட கலர் அடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது.
இமயமலை சென்ற ரஜினி: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பாளர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்பதற்காகவே அவர் இமயமலைக்கு இந்த முறை புறப்பட்டு சென்றாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

லைகாவுக்கே நோ: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்றனர். அதன் பின்னர் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. கமல் மட்டுமே பங்கேற்றார். லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து வேட்டையன் படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், தனது நண்பரான கமல்ஹாசன் படத்தை ரஜினிகாந்த் புரமோட் செய்ய ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் இதற்கு காரணம் என்றும் ரஜினிகாந்த் அதனால் தான் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்கிறார் என்றும் விவாதங்கள் சினிமா வட்டாரத்தில் நடைபெற்று வருகின்றன.
இளையராஜா பயோபிக் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற இளையராஜாவின் பயோபிக் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கமல்ஹாசன் மட்டுமே பங்கேற்றார். தனுஷ் அந்த படத்தில் நடிப்பதால் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு எதிராக இளையராஜாவும் நோட்டீஸ் அனுப்பியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஈகோ மோதல்?: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மத்தியில் ஈகோ மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கமல்ஹாசனின் விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய நிலையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்தது போல ரஜினிகாந்தும் மோகன்லால், சிவராஜ்குமாரை சேர்த்துக் கொண்டு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை இறக்கி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தார். இந்த ஆண்டு இந்தியன் 2 அதிக வசூல் பெறுமா? அல்லது வேட்டையன் அதிக வசூலை ஈட்டுமா என்கிற போட்டியும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











