கணவரை விட நான்.. ரசிகையிடம் ஷாருக்கான் அப்படி பேசினாரா? SVe சேகர் பகிர்ந்த போஸ்ட் உண்மையா?
சென்னை: நடிகர் எஸ்.வி சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில், "என் கணவரை விட உங்களைத்தான் அதிகம் பிடிக்கும்" என்று ஒரு ரசிகை கூறியதற்கு, நடிகர் ஷாருக்கான் மிகவும் உணர்ச்சிகரமான பதில் அளித்ததாக இடம்பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் ஷாருக்கான் அப்படி பேசினாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ள பதிவில், "உங்களுக்கு என்னை விட உங்கள் கணவரைத்தான் அதிகம் பிடிக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் கஷ்ட நேரத்தில் நான் இருக்க மாட்டேன். உங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை நான் ஏற்க மாட்டேன். உங்களுடன் வாழ்க்கையை வாழப் போவது உங்கள் கணவர்தான். எனவே உங்களுக்கு அவரைத்தான் அதிகம் பிடிக்க வேண்டும்" என்று ஷாருக்கான் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால், இந்த தகவலை சரிபார்த்துப் பார்த்தால், அந்த பதிவு முழுமையாக உண்மை இல்லை என்பதுதான் தெரிய வருகிறது. கர்நாடகாவின் மங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் ஷாருக்கான் கலந்துரையாடியபோது, பெண் ரசிகை ஒருவர், "எனக்கு என் கணவரை விட உங்களைத்தான் அதிகம் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.
ஷாருக் கானின் பதில்: அதை கேட்ட ஷாருக்கான் உடனே தனது வழக்கமான நகைச்சுவை பாணியில், "இதை நீங்கள் ரகசியமாக சொல்லியிருக்க வேண்டும். இப்படி எல்லோருக்கும் முன்னால் சொல்லிட்டீங்களே?" என்று சிரித்தபடியே பதிலளித்தார். அரங்கமே அந்த நகைச்சுவைக்கு கைதட்டலால் அதிர்ந்தது.
அதன்பிறகு தொடர்ந்து பேசிய ஷாருக்கான், "நாம் எல்லோரும் சும்மா ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் சொன்னதை உங்கள் கணவர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். நானும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன். உங்கள் கணவர் மீதும், உங்கள் குடும்பம் மீதும் அதே அன்பு இருக்கிறது. நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்று கூறினார். அதுவே அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த முழு பதிலாகும்.

அரசியல் நோக்கமா?: இந்த சூழலில், எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பு நடிகர் விஜயின் சில ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த சிலர், "எங்களுக்கு கணவரை விட விஜயைத்தான் அதிகம் பிடிக்கும்" என்று கூறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பின்னணியில்தான் இந்த பதிவை எஸ்வி சேகர் பகிர்ந்திருக்கிறாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.
இதனால், ஷாருக்கான் கூறாத ஒரு கருத்தை அவர் கூறியதாக பகிர்ந்தது ஏன்? அது உண்மையை சரிபார்க்காமல் செய்யப்பட்ட பதிவா? அல்லது வேறு ஏதாவது அரசியல் பின்னணி உள்ளதா? என்ற விவாதங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications