அடக்கொடுமையே.. அட்லீயாக மாறிட்டாரா ஷங்கர்?.. கேம் சேஞ்சர் விஜய்யின் அந்தப்படத்தோட காப்பியா?
சென்னை: இந்த பொங்கலுக்கு ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிறது. வரும் ஜனவரி 10ம் தேதி மற்ற படங்களை முந்திக்கொண்டு பொங்கல் விடுமுறையில் வசூல் வேட்டை நடத்த ஷங்கர் பக்காவாக பிளான் போட்டுள்ளார்.
தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான புரமோஷன் வேலைகள் பல கோடி ரூபாய் செலவில் ஜோராக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ராஜமெளலியை எல்லாம் அழைத்து வந்த ஷங்கர் புரமோஷன் பண்ணியிருந்தார்.

கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் இது என்னடா அப்படியே விஜய் படம் மாதிரி இருக்கே என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஷங்கர் தலையில் கார்த்திக் சுப்புராஜ் மிளகாய் அரைத்து விட்டாரா? அல்லது அட்லீ பாணியை ஷங்கர் பின்பற்றுகிறாரா என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

சங்கராந்தி இல்லை.. ராம நவமி: வரும் சங்கராந்தி பண்டிகையை டார்கெட் செய்து கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இது சங்கராந்தி இல்லை.. ராம நவமி என ராம் சரண் தலையில் பெரிய ஐஸ் ஃபேக்டரியே ஷங்கர் இறக்கிவிட்டார். படம் வெளியாகட்டும் இந்தியன் 2வுக்கு டஃப் கொடுத்து ரசிகர்களை கடுப்பாக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மதுர படக் காப்பியா?: ஆர். மாதேஷ் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மதுர படத்தின் கதை தான் கேம் சேஞ்சர் கதை என டிரெய்லரை பார்த்த பிறகு ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். 20 வருடத்துக்குப் பிறகு அந்த பழைய கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதிக் கொடுக்க அதை அப்படியே பட்டி டிக்கெரிங் பார்த்துவிட்டாரா ஷங்கர் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அதிலும், டிரெய்லரில் அந்த ரைஸ் மில்லில் அரிசி மூட்டையை சோதனை செய்யும் காட்சிகள் எல்லாம் அப்படியே மதுர படத்தில் இருக்கே என வெளுத்து வாங்கி வருகின்றனர்.
மதுர கதை என்ன?: விஜய், சோனியா அகர்வால், ரக்ஷிதா, பசுபதி, வடிவேலு, சீதா நடிப்பில் வெளியான மதுர படத்தில் கலெக்டரான விஜய்க்கும் அரசியல்வாதியான பசுபதிக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் படமே. பாட்ஷா படத்தில் வருவது போல சோனியா அகர்வால் இறந்தவுடன் வேறு இடத்தில் வேறு ஆளாக விஜய் வாழ்ந்து வருவார். தெறி படத்தின் கதையும் கிட்டத்தட்ட அதே தான் என்பது தனிக்கதை. கலெக்டரான ராம் சரணுக்கும் அரசியல்வாதியான எஸ்.ஜே. சூர்யாவுக்குமான சண்டை தான் கேம் சேஞ்சர். படம் வெளியான பிறகு தான் அதே கதையா? அல்லது ஒன் லைனை மட்டும் உருவி மாற்றி எடுத்திருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.

விஜய் கால்ஷீட் கேட்ட ஷங்கர்: இதில், வேடிக்கை என்னவென்றால் கேம் சேஞ்சர் படத்தை ராம் சரணுக்கு முன்பாக விஜய்யை வைத்தே இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருந்தார் என்றும் விஜய் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு வேண்டாம் என விலகி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுர படமே ஓடாத நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் நிலை என்ன ஆகும் என்பதை இந்த ராம நவமி வந்தால் தெரிந்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











