அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்...வலிமையிலும் தொடருமா ?
சென்னை : அஜித் நடித்து வரும் வலிமை படம் தான் கடந்த 2 ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிக முறை டிரெண்டிங் ஆன விஷயமாக இருக்க முடியும். அந்த அளவிற்கு வலிமை படத்தை உலக ஃபேமஸ் ஆக்கி விட்டனர் அஜித் ரசிகர்கள்.
அஜித் ரசிகர்கள் என்ன தான் கத்தி கூப்பாடு போட்டாலும், படக்குழுவினர் இதுவரை ஃபஸ்ட்லுக்கை கூட வெளியிட்ட பாடில்லை. ஏற்கனவே அஜித் பிறந்தநாளுக்கு ஃபஸ்ட்லுக் வரும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் சொன்னதை நிறைவேற்ற முடியாமல் போனது.

போஸ்டரில் ரிலீஸ் தேதி
இந்நிலையில் படத்தின் டைரக்டர் ஹச்.வினோத், ஒரு சில வாரங்களில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்ற தகவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த போஸ்டரில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்கும் என்று ஒரு தகவலும் பரவி வருகிறது.

ஜுலை 7 ல் ஃபஸ்ட்லுக்கா
ஜுலை 7 அல்லது 14 வலிமை ஃபஸ்ட்லுக் வெளியாகும் என்ற தகவலும் கூறப்படுகிறது. ஆனால் வழக்கமாக அஜித் படங்களின் ஃபஸ்ட்லுக், டிரைலர், பட ரிலீஸ் என எதுவாக இருந்தாலும் அது அஜித்தின் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யப்படும். அப்படி இல்லையென்றால் வியாழக்கிழமைகளில் தான் ரிலீஸ் செய்யப்படும்.

அப்படி பண்ணவே மாட்டார்கள்
ஆனால் ஜுலை 7, 14 தேதிகள் புதன்கிழமையில் வருகிறது. சரி சுதந்திர தினத்திற்கு வெளியிடுவார்கள் என்றால் ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் இந்த தேதிகளில் வலிமை ஃபஸ்ட்லுக் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு தான்.

வியாழக்கிழமையை விட்டு தருவார்களா
அஜித் சாய்பாபா பக்தர் என்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் தொடர்பான வெளியீடுகள் வியாழக்கிழமைகளில் தான் வெளியிடப்படும். ஏதாவது பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக இருந்தாலும் அதையொட்டி வரும் வியாழக்கிழமையில் தான் வெளியிடுவார்கள்.

விதிவிலக்கான அஜித்
பொதுவாக கோலிவுட்டில் சினிமாக்கள் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன. இதில் தற்போது வரை விதிவிலக்காக இருந்து வருபவர் அஜித் தான். அவரது படங்கள் வியாழக்கிழமைகளிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அவைகள் வெற்றியும் பெற்றுள்ளன.

அஜித் படங்களின் வி சென்டிமென்ட்
இதே போல் வி சென்டிமென்ட்டும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித் நடிக்கும் படங்களின் பெயர்கள் வி வரிசையில் துவங்குவதாக வைக்கப்பட்டன. அஜித் கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் தான் இது மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் வலிமை படத்தில் வி வரிசை பெயரை வைத்துள்ளனர்.

சென்டிமென்ட் தொடருமா
வி சென்ட்மென்டிற்காக படத்தின் டைட்டிலை வலிமை என வைத்து விட்டனர். இனி வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்டை ஃபஸ்ட்லுக், டிரைலர், பட ரிலீசிற்கு கடைபிடிப்பார்களா அல்லது 2 வருடங்களாக தள்ளிப் போகும் படத்தை இனியும் தள்ளிப் போடாமல் படத்தின் வேலைகளை முடித்ததும் ரிலீஸ் செய்து விடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











