விஜய் சங்கீதாவிற்கு ரூ.12 கோடி கடன் கொடுத்தாரா? சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டிட்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட Form 26-ல், விஜய்க்கு ரூ.404 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.241 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.645 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜய் சொத்து விவரம்: அதோடு, தனது குடும்பத்தினரான தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா விஜய் மற்றும் உறவினரான திவ்யா சாசாவிற்கு கடன் வழங்கியுள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக கூறப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இந்த சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதாக கூறி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய மனு: இந்த நிலையில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், பெரம்பூர் தொகுதி வாக்காளராக போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது. நேர்மையான, வெளிப்படையான அரசியலை பேசும் விஜய் தனது வேட்புமனுவில் குடும்பத்தினருக்கு பெருமளவு கடன் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில், அந்த பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் தனி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட முன்னேற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications