அது என்ன ஜாலியோ ஜிம்கானா?... இந்த பாட்டு வரிக்குள்ள இவ்வளவு இருக்குன்னு தெரியாம போச்சே!
சென்னை : பீஸ்ட் செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலை வைத்து இணையத்தில் மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். போகிற போக்கை பார்த்தால் இந்த ஆராய்ச்சியில் டாக்டர் பட்டமே வாங்கி விடுவார்கள் போல தெரிகிறது. அந்த அளவிற்கு தீவிர ஆராய்ச்சி நடக்கிறது.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்கல் வீடியோ மார்ச் 19 ம் தேதி வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளார். இந்த பாடலை கு.கார்த்திக் என்பவர் எழுதி உள்ளார்.

என்னப்பா அர்த்தம் இதுக்கு
பாடலின் வரிகள் என்னவோ அட்வைஸ், மோடிவேட் பண்றது போல தான் உள்ளது. ஆனால் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஜாலியோ ஜிம்கானா என்ற வரிகள் தான் தற்போது மிகப் பெரிய ஆராய்ச்சி ஆக நடந்து கொண்டிருக்கிறது. ஜாலியோ ஜிம்கானா என்றால் என்ன, இதற்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா, இது எதை குறிக்கிறது என்பது தான் அதிகமானவர்களின் சந்தேகமாக உள்ளது.

இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க
ஜாலியோ என்பது மகிழச்சியாக இருப்பதாம். ஜிம்கானா என்பது வடமொழியில் உடற்பயிற்சி செய்யும் இடத்தை குறிப்பதாம். ஜிம்கானா என்ற வார்த்தைக்கு குதிரையேற்ற பயிற்சி நடைபெறும் இடம் என்ற அர்த்தமும் உள்ளதாம். கானா என்றால் வடமொழியில் சாப்பாடு என்று அர்த்தம். அதைத் தான் இதில் பயன்படுத்தி உள்ளார்களாம். ஜாலியோ ஜிம்கானா என்றால் நன்றாக சாப்பிட்டு ஜாலியாக, உடம்பு வலிமையோடு இரு என்று அர்த்தமாம்.

இப்படியெல்லாம் அர்த்தம் இருக்கா
ராவம்மா என்றால் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஜாலி பண்ணுவதாம். ராசம்மா என்றால் கொண்டாட மூடினை குறிப்பது என அந்த பாடலை எழுதிய கார்த்திக்கே விளக்கம் அளித்துள்ளார். இது ஜாலி மோட் பாடல் என்பதால் இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஜாலியோ ஜிம்கானா என்ற வார்த்தை பயன்படுத்துவது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிது இல்லை.

யாருக்கும் புரியாது...ஆனா பாட்டு ஹிட்
அமர தீபம் படத்தில் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதிய '' ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா '' பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த படம் 1956ம் ஆண்டு வெளிவந்தது. இயக்குனர் கதாசிரியர் ஸ்ரீதர், கவிஞரிடம் காட்சி அமைப்பை கூறி '' வாத்தியாரைய்யா ஜாலியாக ஒரு பாடல் எழுதி தாருங்கள் '' என கேட்டபோது இந்த பாடலின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என கேட்டாராம். அதற்கு'' இது குறவன் குறத்தி பாடும் பாடல் குறவர் பாஷை உனக்கும் புரியாது எனக்கும் புரியாது. போ பாடல் மிகவும் அமோக வெற்றி பெரும்'' என வாழ்த்தினாராம் .இதனால் அவரை குத்துப்பாடல் ஆசிரியர் எனவும் விமர்சிக்கப்பட்டார் . சலபதிராவ் இசையில் ஜிக்கியின் குரலில் ஜாலிலோ ஜிம்கானா பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இது ஒரு பிளாஷ் பேக். இதேபோல, ஜிம்கானா கிளப் ஜாலியாக பொழுது போக்க செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. எனவே ஜாலியோ ஜிம்கானா என்ற வார்த்தைகள் தமிழகத்தில் பேச்சுவழக்காக மாறியிருந்தது. நடிகர் சின்னி ஜெயந்த் "ஜாலியோ.. ஜிம்கானா.." என்று பாடுவதை போல இழுத்து பேசி சில படங்களில் பயன்படுத்தியிருப்பார். இப்போது அதை பீஸ்ட் பாடலிலும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

புரியாம இருந்தா தான் ஹிட்
1956 ல் வெளிவந்த அந்த படத்திலேயே இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் தற்போதுள்ள பீஸ்ட் படத்திற்கு பயன்படுத்தப்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்க போகிறது. மேலும் இது போன்ற பல புரியாத வார்த்தைகளை நடிகர் சின்னி ஜெயந்த் தனது காமெடிக்காக பயன்படுத்தி உள்ளார். சமீபத்தில் வெளிவந்த ரகிட்ட ரகிட்ட, ஜலபுல ஜங்கு, ஹலமத்தி ஹபிபோ போன்ற புரியாத வார்த்தைகளை போட்டு வரும் பாடல்கள் தான் மாஸ் ஹிட் அடித்து வருகின்றன. அனிருத், சிவகார்த்திகேயன் போன்றோர் இதை ஜிப்ரிஸ் மொழி என்று வேறு சொல்லி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











