மு.க. முத்து மறைவு.. எம்.ஜி.ஆர்-க்கு நேரடி எதிரியாக உருவானவர்.. கலைஞரின் ஸ்கெட்ச் சொதப்பியது எங்கே?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணனுமான மு.க. முத்து இன்று அதாவது ஜூலை 19ஆம் தேதி காலை சுமார் 8 மணி அளவில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. மு.க. முத்து தமிழ் திரை உலகிலும் தமிழ்நாடு அரசியலிலும் ஜொலித்திருக்க வேண்டியவர். அவர் எங்கு சறுக்கினார், அவர் ஜொலிக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
முன்னால் முதலமைச்சர்களான மு.கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆரும் திமுகவில் இணைந்தே பயணித்த காலகட்டம். எம்.ஜி.ஆர்க்கு திரைப்படம் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கு என்பது படிக்காத பாமர மக்களிடத்தில் இருந்து மாடமாளிகையில் உள்ளவர்கள் வரை பரவிக் கிடந்தது. ஆனால் கலைஞருக்கு கிடைத்திருந்த வரவேற்பும் செல்வாக்கும் என்பதும், தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர்கள், அடக்குமுறையை எதிர்ப்பவர்கள், முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், ஆண்டாண்டு கால அடிமைச் சங்கிலியை உடைத்து எறிவேன் என்பவர்கள், பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்து கணிசமானவர்கள் மத்தியில் மட்டுமே இருந்து கிடைத்து வந்தது.
அண்ணாவுக்குப் பிறகு கட்சி மற்றும் ஆட்சி என இரண்டையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு கருணாநிதியை வந்தடைந்தது. அவருக்கு ஆட்சியைக் காட்டிலும் கட்சியின் தலைமைப் பொறுப்பை யாருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லை. அப்படி திமுகவின் தலைவராக மற்றவர்கள் யாராவது வந்திருந்தால், திமுக என்றைக்கோ கரைந்து போயிருக்கும் என்ற எண்ணம் இப்போது திமுக தொண்டர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

ராணிக்கு எதிராக சிப்பாய்: எம்.ஜி.ஆர்க்கும் அவருக்கும் இடையில் தொடங்கிய பனிப்போர், இறுதியாக எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியதில் போய் முடிந்தது. இந்த பனிப்போர் காலத்திலேயே தனது மூத்த மகன் மு.க. முத்துவை தனது கதை, திரைக்கதை, வசங்கள் மூலம் உருவான படங்களில் கதாநாயகனாக அறிமுகம் செய்து, அந்த படங்களுக்கு அவரே தயாரிக்கவும் செய்தார். மு.க. முத்துவை வைத்து கலைஞர் நடத்த திட்டமிட்டது என்பது சதுரங்க ஆட்டத்தில் சர்வ வல்லமையும் பொருந்திய ராணியை எதிர்த்து சிப்பாயை களமிறக்கியதற்கு சமமாகவே பார்க்கப்படுகிறது.
படங்கள்: ஆனால் இந்த ஆட்டத்தில் வென்றது என்னவோ எம்.ஜி.ஆர் தான். கலைஞரின் திட்டம் இங்கு எடுபடவில்லை. 1972ஆம் ஆண்டு பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பூக்காரி (1973), சமையல்காரன் (1974), அணையா விளக்கு (1975), இங்கேயும் மனிதர்கள் (1975), நம்பிக்கை நட்சத்திரம் (1975), மற்றும் எல்லாம் அவளே (1977) போன்ற படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் வெற்றியும் சில படங்கள் நஷ்டத்தை தவிர்க்கும் அளவுக்கு ஓடின. ஆனால் கலைஞர் நினைத்ததைப் போல மக்கள் மத்தியில் மு.க. முத்துவுக்கு செல்வாக்கு கலைஞர் நினைத்ததைப் போல கிடைக்கவில்லை.

திமுகவின் அரசியல் எதிரி: மாறாக திமுகவில் இருந்த கட்சித் தொண்டர்களே, பெருமளவுக்கு மு.க. முத்துவின் ரசிகர்களாகவும் மாறினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்க்கோ பொதுமக்கள் ரசிகர்களாக மாறியது மட்டும் இல்லாமல், அவரது கட்சியின் தொண்டர்களாக மாறினார்கள். இதுதான் எம்.ஜி.ஆரை மிகவும் பலப்படுத்தியது. அதே நேரத்தில் அரசியலில் முழு மூச்சாக களமிறங்க நினைத்த மு.க. முத்துவை, சினிமாவில் மடைமாற்றி விட்டதாலோ என்னவோ மு.க. முத்துவால் ஒரு அளவுக்கு மேல் மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் திமுகவின் நேரடி அரசியல் எதிரியான அதிமுகவில் சென்று இணைந்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு திமுகவுக்கே திரும்பி வந்தார். அதன் பின்னர் வேறு கட்சிக்கு செல்லவில்லை என்றாலும் திமுகவிலும் முக்கிய பொறுப்புகளில் அவர் அங்கம் வகிக்கவில்லை. இந்நிலையில் அவர் மறைந்தது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











