தீவிரமாகும் போதை பொருள் வழக்கு.. பிரபல நட்சத்திர ஜோடிக்கு திடீர் சம்மன்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் நட்சத்திர ஜோடிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட டிவி நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அனிகாவிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னட திரை உலகினருக்கு போதைப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

நடிகர், நடிகைகள்
இதற்கிடையே கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் கூறினார். இதையடுத்து அதைப் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகிணி திவேதி
இதையடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்
இந்த வழக்கு தொடர்பாக, ஷேக் பாசில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், இலங்கையில் உள்ள கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டாக இருக்கிறார். இந்நிலையில் போதைப் பொருள் விவகாரத்தில் மற்றொரு கன்னட மற்றும் தெலுங்கு நடிகையான ஆண்ட்ரிதா ராயுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இலங்கை செல்கிறேன்
இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், நான் இலங்கைக்கு செல்கிறேன். அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்த சேக் பாசிலுக்கு நன்றி என்று கூறி இருந்தார். அந்த வீடியோவும் ஷேக் பாசிலுடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது. இதனால் போதைப் பொருள் விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆண்ட்ரிதா மறுப்பு
ஆனால், ஆண்ட்ரிதா ராய் இதை மறுத்தார். 'விளம்பர படம் ஒன்றில் நடிக்கவே இலங்கைக்கு சென்றேன். அங்கு ஷேக் பாசிலை சந்திக்கவில்லை. பெங்களூரில் நடந்த எனது நண்பர் பிறந்தநாள் விழாவில் ஷேக் பாசில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில் அவர் என் அருகே இருந்தார்' என்று கூறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலானது.

ஆஜராக வேண்டும்
இதற்கிடையே கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகை ஆண்ட்ரிதா ராய்க்கும் அவர் காதல் கணவரும் நடிகருமான திகாந்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். அதன்படி அவர்கள் நாளை 11 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











