தனுஷின் பாலிவுட் படத்தில் அந்த ஹீரோயினும் நடிக்கிறாராமே.. விரைவில் ஷூட்டிங் தொடங்கவும் திட்டமாம்!
மும்பை: தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிக்கவுள்ள பாலிவுட் படத்தில் இன்னொரு பிரபல ஹீரோயினும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு தனுஷ், சோனம் கபூரை வைத்து பாலிவுட்டில் ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
கொரோனா இந்தியாவில் பரவுவதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்திற்கான ஷூட்டிங் வாரணாசியில் போடப்பட்டது.

மூன்றாவது படம்
நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என இரு படங்களில் நடித்துள்ள அவர் தற்போது மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்க உள்ளார். அதுவும், முன்னணி நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

அதே இயக்குநருடன்
கடந்த 2013ம் ஆண்டு தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் இந்தி, தமிழ் என இரு மொழிகளில் வெளியான ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தான் இந்த அட்ரங்கி ரே படமும் உருவாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு நடிகைகள்
தனுஷுக்கு அம்பிகாபதி படத்தில் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். தற்போது உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்க உள்ளார். பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனை தலைவிரித்து ஆடி வரும் நிலையில், தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல். ராய் இப்படியே செய்கிறார் என்ற சர்ச்சையும் பாலிவுட்டில் கிளம்பி இருக்கிறது.

டிம்பிள் ஹயாட்டி
இந்நிலையில், தற்போது அட்ரங்கி ரே படத்தில் இன்னொரு நாயகியாக டிம்பிள் ஹயாட்டி இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர் கல்ஃப் படத்தில் நடித்து பிரபலமானவர். மற்றும் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான 'தேவி 2' படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் நிலைமை சீர் ஆன உடனே படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல்
ராஞ்சனா படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணி படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார். பாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக ஏ.ஆர். ரஹ்மான் அண்மையில் கூறியிருந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா படத்தைத் தொடர்ந்து அட்ரங்கி ரே படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











