இயக்குநர் பாக்யராஜ்.. பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா.. நடிகர் சாந்தனு தகவல்!
சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று
அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு கடந்த 2 வாரங்களில் மட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள் 4 பேர் பலியாகியுள்ளனர்.

பாக்யராஜுக்கு கொரோனா
இயக்குநர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் உள்ளிட்ட 4 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோருக்கு கொரோனா
இதனை அவர்களின் மகனும் நடிகருமான ஷாந்தனு பாக்யராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், "என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரார்த்தனை செய்யுங்கள்
எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்." இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

விரைவில் நலம்பெறுவார்கள்
சாந்தனு பாக்யராஜின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பி விடுவார்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











