Director Sasi’s New Movie: நூறு கோடி வானவில்.. அடடா தலைப்பே அருமையா இருக்கே..சசியின் அடுத்த படம்
சென்னை: Director Sasi's New Movie (இயக்குநர் சசியின் புதிய படம்) இயக்குநர் சசியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு நூறு கோடி வானவில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சொல்லாமலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசி. முதல் படத்தில் பெரிய ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணும் இயக்குநர்கள் மத்தியில் லிவிங்ஸ்டனை வைத்து கதையை நம்பி களமிறங்கியவர் சசி.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர் சசி. இவர் இயக்கிய சொல்லாமலே, டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் பூ படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக அமைந்த படம். அதேபோல் பார்வதியும் இன்றுவரை பூ பார்வதி என்றே அழைக்கப்படுகிறார்.

பரத்துக்கு தரமான கம்பேக் கொடுத்த ஐந்து ஐந்து ஐந்து
பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகர் பரத் திறமைவாய்ந்த நடிகர்களில் ஒருவர். அவர் நடித்த காதல், எம்டன் மகன் உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையை உணர்த்தியிருப்பார். ஆனால் இடையில் அவர் காணாமல் போனார். இப்படிப்பட்ட சூழலில் சசி இயக்கத்தில் ஐந்து ஐந்து ஐந்து படம் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.

விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனை
இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி இப்போது நடிகராகவும் வலம் வருகிறார். நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் விஜய் ஆண்டனிக்குள்ளும் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் எனவும் ரசிகர்கள் இந்தப் படம் மூலம் உணர்ந்தன.

அட்டகாசமான சிவப்பு மஞ்சள் பச்சை
சசி கடைசியாக இயக்கிய படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சித்தார்,ஜிவி பிரகாஷ், லிஜோ மோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அக்காவுக்கும் தம்பிக்குமான் பாசத்தில் கதையை ஆரம்பித்து தம்பி முக்கியமா இல்லை கணவர் முக்கியமா என அக்கா திணறுவதுபோல் நகரும் அந்தப் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜிவி பிரகாஷுக்கு அந்தப் படம் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று. இப்படி பல முக்கியமான படங்களை இயக்கியவர் சசி.

நூறு கோடி வானவில்
இந்நிலையில் சசியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு 'நூறு கோடி வானவில்' என்று பெயரிடப்பட்டிருக்கிறதாம். ஆனால் படத்தின் ஹீரோ, ஹீரோயின் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











