ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. மேல்தட்டு மூளையில் என்ன சொருகப்பட்டு இருக்கு.. இயக்குநர் அமீர் காட்டம்!
சென்னை: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியது குறித்து இயக்குநர் அமீர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அமீர் சென்னை மைலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்னன் சாலையில் "The Law Cafe" என்ற உணவகத்தை திறந்துள்ளார்.

இதன் திறப்பு விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இதில் பலரும் கலந்து கொண்டனர்.
மக்களுக்கான அரசியல் பேச வேண்டும்: இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமீரிடம், சினிமா நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கலைஞர்கள் எப்போதும் மக்களுக்கானவர்கள், அவர்களை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது. மக்களிடம் இருந்து கலை, அரசியல், பண்பாட்டை பிரிக்கவே முடியாது. அரசியல் பேசலாம், ஆனால் மக்களுக்கான அரசியல் பேச வேண்டும் என்றார்.
படித்த இளைஞர்கள் மடைமாறிவிட்டார்கள்: இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து சென்ற போது, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமீர், ஒரு படித்த சமூகத்தை, கடந்த 10 ஆண்டுகளாக என்ன மாதிரியாக மடைமாற்றி வைத்து இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அந்த கோஷம். அங்கு இருந்தவர்கள் படிக்காதவர்களோ, பாமர மக்களோ இல்லை. அங்கு இருந்த அனைவரும் மேல்தட்டு மக்கள். அவர்களின் மூளைக்குள் என்ன சொருகப்பட்டு இருக்கிறது என்பதன் வெளிப்பாடு தான் இந்த கோஷம்.
வர்த்தகத்தில் என்ன தேசப்பற்று: இந்தியன் கிரிக்கெட் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது அல்ல, அது ஒரு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தால், உருவாக்கப்பட்டது அல்ல அது ஒரு கிரிக்கெட் வாரியம். அவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்ததுதானே தவிர, நாடு வீரர்களை உருவாக்கவில்லை. அது ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கியது, அது முழுக்க முழுக்க வர்த்தகம். வர்த்தகத்தில் போய் நீங்கள் தேசப்பற்றை காட்டினீர்கள் என்றால், உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன். விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று அமீர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











