பாக்யராஜுடன் சண்டை போட்டு அதை செய்த கோவை சரளா.. அந்த வயசுலயே அப்படி!
சென்னை: காமெடியிலும் அதகளம் செய்ய முடியும் ஏராளமான ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் அதிரடி கிளப்பியவர் மனோரமா. 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். இவரையடுத்து அந்த இடத்தில் சிறப்பாக பொருந்தி வருபவர் நடிகை கோவை சரளா.
பாக்யராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சு படத்தில் துவங்கிய கோவை சரளாவின் பயணம் அடுத்தடுத்து மிகச்சிறப்பாக அமைந்தது. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள கோவை சரளா, முன்னணி ஹீரோக்களுடனும்இணைந்து காமெடி கலாட்டா செய்து வருகிறார்.

நடிகை கோவை சரளா: நடிகை கோவை சரளா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக தன்னை நிலை நிறுத்தி வருகிறார். கவுண்டமணி, செந்தில் காலகட்டத்திலேயே இவரது காமெடி பயணம் தொடங்கிய நிலையில் அடுத்தடுத்த காமெடி நடிகர்களுடன் இவர் நடித்து வருகிறார். வடிவேலு, விவேக் உள்ளிட்டவர்களுடனும் இவரது காமெடி பயணம் தொடர்ந்தது. தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்து வரும் கோவை சரளாவிற்கு 60க்கும் மேல் வயதாகிறது. இருந்தபோதிலும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நாயகியாக நடித்துள்ள கோவை சரளா: திருமணமே செய்து கொள்ளாத கோவை சரளா காஞ்சனா 2, காஞ்சனா 3 என அடுத்தடுத்த படங்களில் லாரன்சுடனும் பேயுடனும் இணைந்து கலாட்டா காமெடி செய்துள்ளார். நடிகை மனோரமா 1000 படங்களுக்கும் மேல் நடித்து கின்னசில் இடம்பெற்ற நிலையில், கோவை சரளா இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோவை சரளா நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து 15 படங்களுக்கும் மேல் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். நடிகர் எம்ஜிஆரின் தீவிர ரசிகையான கோவை சரளா அவரை பார்த்துதான் சினிமாவில் நடிக்க வந்ததாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்யாத கோவை சரளா : 60 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்துக் கொள்ளாத கோவை சரளா, அதுகுறித்து பேட்டியொன்றில் விளக்கம் அளித்ததும் கவனத்தை பெற்றது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் அவர் பேட்டியொன்றில் கூறியிருந்தார். குறிப்பாக தான் யாரையும் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். கோவை சரளாவிற்கு முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல படங்கள் மிகச்சிறப்பாக அமைந்தன. துவக்கத்தில் வயதான கேரக்டர்களில் நடித்தார் கோவை சரளா. இந்நிலையில் கோவை சரளா குறித்து பேட்டி ஒன்றில் பாக்யராஜ் பேசியது தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பாக்யராஜிடம் சண்டை: தான் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கு முன்னதாக ஒரு தயாரிப்பாளரை சந்திக்க சென்றதாகவும் அங்கு கோவை சரளாவின் அக்காவும் சினிமா வாய்ப்பு கேட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது தன்னுடைய அக்காவுடன் வந்த கோவை சரளாவை பார்த்து உனக்கு சினிமாவில் நடிப்பதற்கான முகம் உள்ளது என்றும் கண்டிப்பாக நீ பின்னாலில் சிறப்பான நடிகையாக மாறுவாய் என்றும் கூறியதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அப்போது கோவை சரளாவிற்கு எட்டு வயது. இந்நிலையில் அசிஸ்டன்ட் இயக்குநராக இணைந்து தொடர்ந்து இயக்குநராக மாறிய நிலையில் தன்னிடம் சண்டை போட்டு கோவை சரளா முந்தானை முடிச்சு படத்தில் நடிககும் வாய்ப்பை பெற்றதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











