விடை பெற்றார் மாரிமுத்து.. கொள்ளி வைத்த மகன்.. கதறி அழுதபடி விடை கொடுத்த சொந்தங்கள்!
சென்னை: மாரடைப்பால் உயிரிழந்த மாரிமுத்துவின் உடல், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு இல்லத்தரசிகள் மனதிலும் இடம்பிடித்தார் மாரிமுத்து.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று போராடி கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

நடிகர் மாரிமுத்து: நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை டப்பிங் பேசிக் கொண்டு இருந்த மாரிமுத்துவுக்கு திடீரென வியர்த்து உடல் ஒரு மாதிரி இருந்ததால், இதோ வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு வந்தவர். திடீரென காரை எடுத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்த போதே அவரது உயிர் பிரிந்தது.
கதறி அழுத நடிகர்கள்: இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர்கள் சரத்குமார், ரமேஷ் கண்ணா, இயக்குநர் வசந்த், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், சென்றாயன், ரோபோ சங்கர், சூரி, பிரசன்னா, பொன்வண்ணன், சரண்யா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், எதிர்நீச்சல் சீரியலில் அவருடன் இணைந்து நடித்து வரும் நடிகர் நடிகைகள் அவரது உடலை சுற்றி நின்று கொண்டு கதறி கதறி அழுதனர்.
சொந்த ஊரில் தகனம்: அதன்பின் மாரிமுத்துவின் உடல் வாகனம் ஒன்றில் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்திற்கு காலை 6 மணிக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு பொது மக்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னையிலும் அஞ்சலி செலுத்திய நடிகர் விமல், அவரது வீட்டுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விடைபெற்றார் மாரிமுத்து: இதையடுத்து, இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் இரண்டு மணி அளவில் செய்யப்பட்டு அவரது உடல் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழி எங்கும் அவரது சொந்தபந்தங்கள் நின்று கொண்டு மாரிமுத்துவிற்கு பிரியாவிடை கொடுத்தனர். இதையடுத்து தனது தந்தையின் உடலுக்கு அவரது மகன் அகிலன் கதறி அழுதபடி கொள்ளி வைத்துவைட்டு கதறி கதறி அழுதார். ஏய்... இந்தாம்மா... என்ற கணீர் குரல் காற்றில் கரைந்தது.


Click it and Unblock the Notifications











