Adhik Ravichandran: தயாரிப்பாளர் வினோத் பயத்தை கொடுத்தாரு.. ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சு!
சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது மார்க் ஆண்டனி.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படம் கடந்த சில தினங்களில் 66 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டை மார்க் ஆண்டனி குழுவினர் இன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் நெகிழ்ச்சி தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான மார்க் ஆண்டனி படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில தினங்களில் இந்தப் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 66 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் இந்தப் படத்தின் வசூல் வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சரியான ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவந்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தின்மூலம் அதிகமான கவனத்தை பெற்றுள்ளார். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. படத்தில் ஹீரோவாக விஷால் மற்றும் வில்லனாக எஸ்ஜே சூர்யா இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.
படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதில் விஷால், ஆதிக் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தின் கதையை விஷாலுக்கு தான் நள்ளிரவு 1 மணியளவில் சொன்னதாகவும் அவர் படத்தில் மிகவும் இம்ப்ரஸ் ஆனதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உடனடியாக தயாரிப்பாளர் வினோத்திற்கு தன்னை அறிமுகம் செய்ததாகவும் அவரும் கதையில் மிகுந்த இம்ப்ரஸ் ஆகி உடனடியாக படத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஓகே சொன்னதால் தனக்கு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டுமே என்ற அதிகமான பயமும் பொறுப்பும் ஏற்பட்டதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு தான் மூன்று பேரை காரணமாக சொல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் வினோத், நடிகர் விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா ஆகியோரே இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சரியாக தன்னை நிரூபிக்காத நிலையில் தன்மீது நம்பிக்கை கொண்டு இந்தப் படத்தை தனக்கு கொடுத்த வினோத் குறித்தும் ஆதிக் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வினோத், விஷால் ஆகியோருக்கு 2 மணிநேரங்கள் மட்டுமே தான் கதையை விவரித்ததாகவும் ஆனால் எஸ்ஜே சூர்யாவிடம் 8 மணிநேரம் கதை குறித்து பேசியதாகவும் அந்த அளவிற்கு அவர் கேள்விகளை அடுக்கியதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











