Love You Ajith! மனைவியை விட அஜித்தை அதிகம் நேசிக்கிறேன்.. GBU சக்சஸ் மீட்டில் எமோஷனலாக பேசிய ஆதிக்
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து, தேங்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குறித்து மிகவும் எமோஷனலாக பேசினார்.
அவர் பேசும்போது, " 7 வது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித் சாரின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.

நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா வாழ்க்கை இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.
நம்பிக்கை: படப்பிடிப்புத் தளத்தில் கூட அஜித் சாரிடம் கேட்டேன், ' எதை வைத்து சார் நீங்கள் போனி கபூர் சாரிடம் நான் பெரிய இயக்குநராக வருவேன்' எனக் கூறினீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் கூறாமல், சிரித்துக் கொண்டு போய்விட்டார். இந்த தருணத்தில் நான் சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அஜித் சார் என்னை நம்பிய அளவுக்கு நீங்களும் என்னை நம்பினீர்கள். இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது மிகவும் எமோஷ்னலாகிவிட்டேன். அந்த கூட்டத்திற்குள் இருந்தவன்தான் நான்.

அஜித்: அங்கு இருந்த என்னை இங்கு உங்கள் முன் நிறுத்தி அழகு பார்க்க வைத்த அஜித் சாருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அஜித் சார் தன்னை எப்போது பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை ஒரு நடிகராக மட்டுமே நினைக்கிறார். இந்த படம் இந்த அளவிற்கு எனர்ஜியாக இருக்க முக்கிய காரணம், அவரது மொத்த எனர்ஜியும் குட் பேட் அக்லி தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் சார்தான். அதில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸ்க்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ அஜித் சார்.

மனைவியை விட: நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களை தான் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்" என எமோஷனலாக பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











