Adhik Ravichandran: வாழ்க்கையை மாற்றியவர் அஜித்தான்.. மார்க் ஆண்டனி வெற்றியால் நெகிழ்ந்த இயக்குநர்!
சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துவரும் வரவேற்பு விஷால், ஆதிக் ஆகியோருக்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது. வழக்கம்போல மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார் எஸ்ஜே சூர்யா.

நடிகர் அஜித் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி: இரும்புத்திரை படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று அவருக்கு கைக்கொடுக்காமல் சொதப்பியது. இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ஷனில் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் மார்க் ஆண்டனி படம் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்க்ள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை சிறப்பான ஈர்த்த நிலையில், படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்றது. பல பேட்டிகளில் படம் குறித்தும், தன்னுடைய கேரியர் குறித்தும் நடிகர் விஷால் தொடர்ந்து பேசி படத்திற்கு பெரிய அளவில் பிரமோஷனை செய்திருந்தார். நேற்றைய தினம் திருப்பதி கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் படம் திட்டமிட்டபடி இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் விமர்சனங்கள் மிகச்சிறப்பான வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சிறப்பான வெற்றிப்படங்களின் வரிசையில் தற்போது மார்க் ஆண்டனி படமும் இடம்பெற்றுள்ளது.

டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுத்துள்ளது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் படத்தின் ரிலீசை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சிறப்பான தருணத்தில் நடிகர் அஜித்குமாரை தான் நினைவில் கொள்வதாக அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்தபோது, தன்னுடைய ஜானரை மாற்றிக் கொள்ள தன்னை ஊக்குவித்தவர் அஜித் என்று கூறியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படத்தை தான் இயக்க அஜித்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக விஷால், எஸ்ஜே சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் என அனைவரும் தங்களுடைய பெஸ்டை கொடுத்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











