மிரட்டலான கதையுடன் டிமாண்டி காலனி 2வுக்கு தயாராகும் அஜய் ஞானமுத்து... விரைவில் அறிவிப்பு!
சென்னை :நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் டிமான்டி காலனி. இந்தப் படம் அருள்நிதிக்கும் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிற்கும் சிறப்பாக கைக்கொடுத்தது.
தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய், தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிமான்டி காலனி படம்
நடிகர் அருள்நிதி மிகவும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அவரது நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் டிமான்டி காலனி. இந்தப் படத்தில் எந்தவிதமான ஹீரோயிசத்தையும் காட்டாமல் மிகவும் இயல்பான, வேலையில்லாத இளைஞன் கேரக்டரில் நடித்திருந்தார் அருள்நிதி.

அஜய் ஞானமுத்து இயக்கம்
இந்தப் படத்தை இயக்கியிருந்தார் அஜய் ஞானமுத்து. ஹாரர் ஜானரில், வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான இந்தப் படம் பேயை காமெடியாக்காமல், பேய் என்றால் மக்களுக்கு இருக்கும் உருவகத்தை வெளிப்படுத்தியது. மிரட்டலான அனுபவத்தையும் இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுத்தது.

சிறப்பான ஹாரர் படம்
தமிழில் சிறப்பான ஹாரர் படங்களில் இந்தப் படத்திற்கு கண்டிப்பாக இடம் உண்டு. படத்தில் அருள்நிதியுடன் எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குறைவான கேரக்டர்களை கொண்டு, குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படத்தை கொடுக்க முடியும் என்று அஜய் ஞானமுத்து இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார்.

இமைக்கா நொடிகள் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார் அஜய். இந்தப் படம் த்ரில்லர் கதையை மையமாக கொண்டு வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கி முடித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் கோப்ரா
மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. படத்தில் விக்ரமின் போஸ்டர்களை பார்க்கும்போது படம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

டிமான்டி காலனி 2 படம்
இதையடுத்து தற்போது டிமான்டி காலனி 2 படத்தை கையிலெடுத்துள்ளார் அஜய் ஞானமுத்து. இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை. அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி வேணுகோபால் படத்தை இயக்கவுள்ளார்.

தயாரிப்பாளராகிறார் அஜய் ஞானமுத்து
இந்தப் படத்திற்கு அஜய் ஞானமுத்து கதை எழுதியுள்ளதுடன் தயாரிக்கவும் உள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகத்தை மேலும் சிறப்பாக எடுக்க அஜய் ஞானமுத்து திட்டமிட்டு அதற்கேற்ப கதை எழுதியுள்ளாராம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
டிமான்டி காலனி படம் அருள்நிதியின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. சிறப்பான திரைக்கதையும் படத்தில் காணப்பட்டது. நீண்ட நாட்களாக ரசிகர்கள் இதன் இரண்டாவது பாகம் குறித்து கேட்டு வந்த நிலையில், விரைவில் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











