Demonte Colony 3 Update: அதுக்குள்ள 10 வருஷம் ஆச்சா? டிமான்டி காலனி அஜய் ஞானமுத்துவின் எமோஷ்னல் போஸ்ட்!
சென்னை: தமிழ் சினிமாவில் விட்லாச்சாரியாருக்குப் பின்னர் பேய் படங்களுக்கு என்று மார்க்கெட்டை ஓபன் செய்து வைத்தவர் என்றால் அது மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தான். இவரது நடிப்பில் வெளியான பேய் படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடிக்க, மொத்த தமிழ் சினிமாவும் பேய் படங்களுக்கு பின்னால் சென்று கொண்டு இருந்தது. இதில் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ஒரு வாரத்திற்கு 5 பேய் படங்கள் ரிலீஸ் ஆகும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டது. அனைத்திலும் ஒரே டெம்ப்ளேட் கதை என்பதால் பல படங்கள் தோல்வியைத் தழுவியது. அப்படியான கூட்டத்திற்கு மத்தியில் தனது அட்டகாசமான திரைக்கதையால் ரசிகர்கள் மனதை வென்றது மிஷ்கினின் பிசாசு. அதேபோல், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த படம் அஜய் ஞானமுத்துவின் டிமான்டி காலனி.
டிமான்டி காலனி படம் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து மிகவும் எமோஷனலாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் " அன்பு நண்பர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும், என் மகிழ்ச்சியை கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. பத்து வருடங்களுக்கு முன்னாள் தமிழ்த் திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் 'டிமான்டி காலனி' பத்து வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது. நாம் விரும்பியதை செய்யும் போது அதற்கான ஆதரவும் அன்பும் தொடர்ந்து கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

முதல் படம்: என்னுடைய முதல் படமான 'டிமான்டி காலனி' நான் இயக்குநராகப் பணிபுரிவதற்கு முந்தைய கால கட்டத்தின் பிரதிபலிப்பாகும். ஏனெனில் 'ஹாரர்' படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. 'தி எக்ஸார்சிஸ்ட்', 'தி ஓமன் மற்றும் 'தி கன்ஜூரிங் போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளைக் கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. அதில்தான் 'டிமாண்டி காலனி' என்ற எனது ஹாரர் ஜானர் படத்தை உருவாக்கினேன்.
புதிய ஹாரர் உலகம்: மோகனா மூவிஸ் எம்.கே. தமிழரசு சார், அருள்நிதி சார் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி சார் ஆகியோரின் ஆதரவு இல்லை என்றால், 'டிமான்டி காலனி' திரைப்படம் உருவாகி இருக்காது அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் டிமான்டி காலனி திரைப்படம் ஒரு நினைவாக இல்லாமல் ஒரு புதிய உலகமாக மாறி நிற்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

மூன்றாவது பாகம்: அருள்நிதி சார் 'டிமான்டி காலனி உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பது எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது. மேலும் தொழில்துறை நண்பர்கள், பத்திரிகை-ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் தரமான படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த DC வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எனது குழுவுடன் இணைந்து அனைத்து வகையிலும் தரமாகவும், சிறப்பாகவும் எடுத்து வருகிறோம். இது நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு புதுவகையான சில்லிடும் ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்தகட்ட தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன் ."THE END IS TOO FAR!" அன்புடனும் நன்றியுடனும், அஜய் ஆர் ஞானமுத்து" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த கடிதம் இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











